பள்ளி விடுமுறையால் பயணிகள் எண்ணிக்கை கூடும்: ஜோகூர்

2 mins read
db9c5c29-4b8b-4459-82e2-846b03f7071e
பள்ளி விடுமுறையின்போது சிங்கப்பூரிலிருந்து பலர் ஜோகூருக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கிவிட்டதால் அளவுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க ஜோகூர் சுற்றுலாத் துறை தயாராகிறது.

சிங்கப்பூரிலிருந்து அதிகமான பயணிகள் வருவர் என்று உள்ளூர் வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன.

உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் வருவதால் ஜோகூர் சுற்றுலாத் துறை நல்ல காலத்தை அனுபவிப்பதாக டெசாரு பழப் பண்ணை இயக்குநர் ஸ்டீவ் எர் குறிப்பிட்டார்.

“மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இப்போது பள்ளி விடுமுறை என்பதால் பண்ணைக்கு அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.

ஜோகூரிலிருந்து 75 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெசாருவில் இயங்கிவரும் பல ஹோட்டல்களில் முன்பதிவுகள் குவிந்ததாக திரு எர் கூறினார்.

“ஜூன் மாதம் எங்களுக்குப் பரபரப்பான மாதமாக இருக்கும், குறிப்பாக இரண்டாம் வாரத்திலிருந்து அப்படியிருக்கும். ஏனென்றால் மலேசிய, சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள் பலர் வருவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் திரு எர், “ஜோகூர் பாருவைத் தவிர டெசாரு, மெர்சிங் ஆகிய பல பகுதிகளிலும் உள்ள ஹோட்டல்களின் முன்பதிவுகளும் உயர்ந்தன,” என்றார்.

சிங்கப்பூரிலிருந்துதான் அதிகமானோர் வருகின்றனர் என்றபோதும் ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் வருவதாகத் திரு எர் சொன்னார்.

பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் ஜோகூரில் உள்ள ஹோட்டல் அறைகளின் முன்பதிவுகள் ஏறக்குறைய 80 விழுக்காடு நிரம்பிவிட்டதாக மாநில ஒருமைப்பாட்டு, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே. ரேவன் குமார் குறிப்பிட்டார்.

அது, ஜோகூருக்குப் பலர் பயணம் செய்யவிருப்பதற்கான அனைத்துலக விருப்பத்தைக் குறிப்பதாக அவர் கூறினார்.

மலேசியாவில் பள்ளி விடுமுறை மே 29ஆம் தேதி தொடங்கியது. அது ஜூன் 9ஆம் தேதி வரையில் நீடிக்கும். சிங்கப்பூர் பள்ளி விடுமுறை மே 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.

குறிப்புச் சொற்கள்