பேங்காக்: தாய்லாந்துக்குச் சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் (2025) வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு தாய்லாந்தை உலுக்கிய சில நிகழ்ச்சிகள் அதற்குக் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
போன ஆண்டு, தாய்லாந்து சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 33 மில்லியனுக்குக் குறைந்தது. ஆண்டு அடிப்படையில் அது 7.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. கொவிட்-19 பெருந்தொற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது கடந்த பத்தாண்டில் அதுவே ஆகக் குறைவு என்று சொல்லப்பட்டது.
சென்ற ஆண்டுத் தொடக்கமே தாய்லாந்துக்குச் சாதகமாக ஆரம்பிக்கவில்லை. சீனாவைச் சேர்ந்த நடிகர் வாங் ஸிங் தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டார். பின்னர் பக்கத்து நாடான மியன்மாரின் மோசடி நிலையத்திலிருந்து அவர் மீட்கப்பட்டார். அதன் பிறகு மியன்மார் நூறாண்டு காணாத நிலநடுக்கத்தைச் சந்தித்தது. அதுவும் தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறையை உலுக்கியது. கம்போடியாவுடன் எல்லைப் பூசல், தென்பகுதியில் கடும் வெள்ளம், அரசியல் நெருக்கடியால் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் என்று பல நிகழ்வுகளும் தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறைக்குப் பாதிப்பாக அமைந்தன.
தாய்லாந்து சென்ற சுற்றுப்பயணிகளில் மலேசியர்களே அதிகம். கடந்த ஆண்டு 4.5 மில்லியன் மலேசியர்கள் அங்குப் போயிருந்தனர். அடுத்தடுத்த நிலைகளில் சீனாவும் இந்தியாவும் வந்தன. சீனாவிலிருந்து 4.47 மில்லியன் பேரும் இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் பயணிகளும் அங்குச் சென்றிருந்தனர். தாய்லாந்தின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சு அந்தத் தகவல்களை வியாழக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்டது.
ரஷ்யா நான்காம் இடத்தையும் தென்கொரியா ஐந்தாம் நிலையையும் பிடித்தன. 1.9 மில்லியன் ரஷ்யர்களும் 1.6 மில்லியன் தென்கொரியர்களும் போன ஆண்டில் தாய்லாந்து சென்றிருந்தனர்.
சுற்றுப்பயணத் துறையின் மூலம் தாய்லாந்து ஈட்டிய வருவாய் சென்ற ஆண்டில் $61.2 பில்லியன் வெள்ளியாக இருந்தது. அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 4.7 விழுக்காடு குறைவு. உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளின் மூலம் கிடைத்த வருவாயும் 1.3 விழுக்காடு குறைந்தது.
2026ஆம் ஆண்டில் 36.7 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கத் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

