நியூயார்க்: என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ஹென்சன் ஹுவாங்கை விலக்குவது குறித்து முடிவெடுக்க அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு புதன்கிழமை (நவம்பர் 11) பின்னேரத்தில் சந்திக்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்த ஒருவர் இதைப் பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நிர்வாகக் குழு சந்திப்புப் பற்றி என்விடியா உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என்று நம்பப்படும் பெண்ணுடனும் தம்முடன் வேலை செய்யும் வேறு பெண்ணுடனும் தகாத உறவில் இருந்ததாக நம்பப்படுவதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது. தம்முடன் பணியாற்றும் ஊழியருடனும் அவர் தகாத உறவில் இருந்ததாக ஆக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த தெரிவுக்கான பணிகள்
அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான தெரிவுகளை அடையாளம் காண என்விடியா நிர்வாகக் குழு வேறு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும் தகவல் தெரிந்த ஒருவர் கூறியுள்ளார்.
டிரம்ப்-ஹுவாங் நட்புறவு
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ஜென்சன் ஹுவாங்குக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகள்மீது மறுபடியும் அதிக கவனம் திரும்பியுள்ளது. ஹுவாங் சிக்கியுள்ள சர்ச்சை குறித்துத் தாம் அதிர்ச்சியடைந்ததாகத் திரு டிரம்ப் திங்கட்கிழமை (நவம்பர் 9) கூறியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பில் டிரம்ப் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஹுவாங் கடந்த ஈராண்டுகளாக ஆதரவு தெரிவித்துவந்துள்ளார். சீனச் சந்தைக்கு அதினநவீனச் சில்லுகளை விற்க முயன்ற நிலையில் அவர் பலமுறை அமெரிக்க அதிபரைச் சந்தித்தார். என்விடியாவின் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளைச் சீனா பெறுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஹுவாங், அமெரிக்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுவந்தார்.
விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்
இதற்கிடையே, பலருக்கும் தெரியாத பங்குச்சந்தை ஆய்வாளரும் விற்பனையாளருமான ஒருவர்தான் என்விடியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் லமார்க்கோ என்ற அந்த ஆடவர், கடந்த மே மாதம் 13ஆம் தேதி என்விடியாவின் சந்தேகத்துக்குரிய நடத்தையைப் பற்றி 40 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.
சீனாவுடனான தனது வர்த்தகம் குறித்து என்விடியா எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்ற கேள்வியை அந்த அறிக்கை முன்வைத்தது. அதோடு, ஹுவாங்கிற்கும் என்விடியாவின் முக்கிய வாடிக்கையாளர் நிறுவனமான மெகாஸ்பீடுக்குப் பணியாற்றிய ஏலிஸ் ஹுவாங் என்பவருக்கும் இடையே முகம் சுளிக்கும் வகையில் இருந்த நெருங்கிய உறவைப் பற்றியும் அவர் ஒரு பத்தியில் விவரித்திருந்தார்.
ஏலிஸ் ஹுவாங், சீனாவின் உளவாளி என்று நம்பப்படுபவர்.
சீனா மறுப்பு
சீனா இவ்விவகாரத்தில் தான் உளவு வேலையில் ஈடுபடவில்லை என்று கூறிவருகிறது. ஏலிஸ் ஹுவாங்கோ என்விடியாவின் பேச்சாளர்களோ இதுகுறித்துக் கேட்கப்பட்டதற்கு இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
