செங்டு: சீனாவில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் இதற்குத் தீர்வுகாண எடைக் குறைப்பு முகாம்களை நாடுகின்றனர்.
பயிற்றுவிப்பாளர் முன்னிலையில் அன்றாட உடற்பயிற்சி, சரியான இடைவெளியில் எடையைச் சோதித்தல், தின்பண்டங்கள் உண்பதைக் கடுமையாகக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை வழங்கும் இத்தகைய முகாம்கள் சீனா முழுவதும் அதிகரித்து வருகின்றன.
சமூக ஊடகத்தில் புகழ்பெற்ற ஒருவர், சென்ற ஆண்டு (2023) சீனாவின் வடக்குப் பகுதியில் எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்ததை அடுத்து இதுகுறித்த சர்ச்சை வெடித்ததாகச் சீன ஊடகங்கள் கூறின.
செங்டு நகரில் செயல்படும் எடைக் குறைப்பு முகாமில் கிட்டத்தட்ட 60 பேர் இணைந்துள்ளனர். இவர்களில் திருவாட்டி யாங் சியாவும் ஒருவர்.
23 வயதாகும் இவர், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தனது ஆசிரியப் பணியிலிருந்து விலகி செங்டு எடைக் குறைப்பு முகாமுக்கு விண்ணப்பித்தார்.
பயிற்றுவிப்பாளரின் கண்காணிப்பில் வேகநடைப் பயிற்சியில் ஈடுபடும்போது யாரும் இடையில் நின்று தின்பண்டங்களை வாங்கி உண்ணமுடியாது என்கிறார் இவர்.
114 கிலோகிராம் எடையுடன் இருந்த இவர் ஜூலை மாதம் இந்த முகாமில் சேர்ந்த பிறகு 30 கிலோகிராம் எடையைக் குறைத்துள்ளார். வேகநடையால் தனது உடல் வலிமை கூடியிருப்பதாக இவர் கூறினார்.
மாதந்தோறும் 3,000 யுவான் (S$557) கட்டணம் செலுத்துகிறார் திருவாட்டி யாங். பங்கேற்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் முகாமிலேயே தங்கவேண்டியது கட்டாயம்.
தொடர்புடைய செய்திகள்
முகாமில் விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனையாக கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதனால் யாரும் விதிகளை மீறுவதில்லை என்கிறார் திருவாட்டி யாங்.

