பெய்ஜிங்/ துபாய்: சீனா, ஓமான் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஓமான் சுல்தான் ஹைதம் தாரிக், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் இருதரப்பு வர்த்தக, முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தை முன்மொழிந்தார்.
அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீட்டிற்குப் புதிய வழிகளைத் திறக்கும் என்றும் வணிகப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் என்றும் சுல்தான் ஹைதம் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனாவுக்கு இருநாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள ஓமான் சுல்தான், பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற சீன அதிபர் உடனான சந்திப்பின்போது அந்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
நவம்பர் 1ஆம் தேதி பெய்ஜிங் சென்றடைந்த சுல்தான் ஹைதமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், விண்வெளி, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் கூட்டு முதலீட்டு நிதிகள் வாயிலாகத் திட்டங்களை உருவாக்க ஓமான் விரும்புகிறது.
சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஓமான், கச்சா எண்ணெய், எரிசக்திப் பொருள்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே நேரடி விமானச் சேவைகள் தொடங்கப்பட்டதால் வர்த்தக, சுற்றுலாத் தொடர்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
ஓமானுடனான உறவை வலுப்படுத்துவது இரு நாடுகளுக்குமான பகிரப்பட்ட உத்திபூர்வத் தெரிவு எனச் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஓமான் சுல்தானிடம் தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றவும், வட்டார அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்குப் பங்களிக்கவும் இருதரப்பு நட்புறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல தாம் தயாராக இருப்பதாகத் திரு ஸி உறுதியளித்தார்.
1978ஆம் ஆண்டில் சீனாவும் ஓமானும் தூதரக உறவை ஏற்படுத்திய பிறகு, ஓமான் நாட்டுத் தலைவர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
முதலீடு, நிதி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்திய சுல்தான் ஹைதம், மத்திய கிழக்கு விவகாரங்களில் சீனாவின் ஆக்கபூர்வ நிலைப்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினார்.
