வென்ஷோவ்: சீனாவின் கிழக்கு நகரான வென்ஷோவை பவி புயல் நெருங்குவதால் சனிக்கிழமை (ஜூலை 11) 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் புயல் முன்னதாக ஜப்பானின் தெற்கு சகிஷிமா தீவுகளைக் கடுமையான மழையுடனும் பலத்த காற்றுடனும் தாக்கிய பிறகு வடக்கு தைவானையும் உரசிச் சென்றது.
குளிர்ந்த கடல் பகுதிக்கு மேல் வடமேற்கு திசையில் நகர்வதால் பவி புயல் படிப்படியாக வேகம் குறைந்து பலவீனமடைந்தாலும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவிற்கு இணையாகப் பரந்து விரிந்துள்ள அதன் மழை மேகக்கூட்டங்கள் காரணமாகப் பெருமழை பெய்யக்கூடிய அபாயம் நீடிக்கிறது.
தேசிய வானிலை மையத்தின் தகவல்படி, சனிக்கிழமை காலை 08:08 மணி நிலவரப்படி, இப்புயல் கிழக்கு மாகாணமான ஷெஜியாங்கில் உள்ள வென்லிங் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் நகர்ந்து வருகிறது.
சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் வென்ஷோவ் நகரின் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இப்புயல் கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வென்ஷோவ் அமைந்துள்ள ஷெஜியாங் மாகாணம் முழுவதும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான ஃபுஜியானில் 100,000க்கும் அதிகமான மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“கவலையாக இருந்தாலும், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பும் புயல்களை எதிர்கொண்டுள்ளோம். இதிலிருந்தும் மீண்டு வருவோம்,” என்று புயல் எச்சரிக்கையால் மூடப்படவிருந்த பாரம்பரியச் சந்தையில் மளிகைப் பொருள்களை வாங்க வந்த 50 வயது வென்ஷோவ் குடியிருப்பாளரான ஹுவாங் சிங்ஹுவான் கூறினார்.
இரண்டு முதல் மூன்று நாள்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.
“தற்போது அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு வராது என நம்புகிறேன். எனவே, பீதியடைந்து பெருமளவில் உணவையோ அல்லது இதர பொருள்களையோ குவித்து வைக்கத் தேவையில்லை,” என்றார் அவர்.

