பிரான்சில் தொடரும் போராட்டம்: ஏறக்குறைய 1,000 பேர் கைது

பிரான்சில் தொடரும் போராட்டம்: ஏறக்குறைய 1,000 பேர் கைது

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

25 Oct 2026 - 11:03 am

2 mins read

பாரிஸ்: பிரான்ஸ் முழுதும் தொடரும் போராட்டத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (அக்டோபர் 24) பிற்பகுதியில் சில மோதல்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு நாள் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றன. ஆனால் பிறகு, பாரிஸ் உட்பட பல நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகளையும் பயன்படுத்தினர்.

மார்சேயில் தடுப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன; போர்டோவில் உள்ள கடையொன்றின் பலகைகளை மக்கள் கிழித்தெறிந்தனர்.

கடந்த வார இறுதியில் பிரான்ஸ், அதன் நவீன வரலாற்றில் மிகமோசமான காட்சிகளைக் கண்டது. ஆனால் இப்போது அத்தகைய கலவரங்களும் சூறையாடல்களும் நடப்பதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர்.

சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ 410,000 பேர் கலந்துகொண்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 800,000 என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவின உயர்வு, பள்ளிகளின் மோசமான நிலைமை ஆகியவற்றுக்கு எதிராக இந்த ஆகப் புதிய போராட்டங்கள் வெடித்தன.

அவை மீண்டும் பெரும் அமைதியின்மையாகவும் வன்முறையாகவும் மாறுவதைத் தடுக்க 70,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

கடந்த வாரப் போராட்டத்தின்போது அதிகாரிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டு, பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் மட்டுமே போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கே அனுமதி உண்டு என்றும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் இவ்வாரத் தொடக்கத்தில் ஆணை பிறப்பித்திருந்தார்.

பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துதல், பெருந்தீமூட்டுதல், சூறையாடல் போன்ற குற்றங்களுக்காக, விரைவு நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகு அண்மை நாள்களில் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்