கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறை, இணைய மோசடியின் தொடர்பில் அதன் குடிமக்களில் ஏழு பேரைத் தேடிவருகிறது. எல்லை தாண்டிய இணைய மோசடிக் கட்டமைப்பை முறியடிக்க வட்டார அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக அது அமைகிறது. சிங்கப்பூர் அதிகாரிகள் அந்த மோசடிக் கட்டமைப்பை அடையாளம் கண்டனர்.
நாடு முழுதும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. “காவல்துறை ஏழு பேரையும் தேடுவதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று மலேசிய மத்தியக் காவல்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் எம் குமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்க் காவல்துறை இணைய மோசடியின் தொடர்பில் ஏழு மலேசியர்களையும் 27 சிங்கப்பூரர்களையும் பிடிப்பதற்கான கைதாணையைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து மலேசியாவின் நடவடிக்கை வந்துள்ளது. ஆள்மாறாட்ட மோசடி மூலம் அவர்கள் $41 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கம்போடியத் தலைநகர் நோம் பென்னிலிருந்து மோசடிக் கும்பல் ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் வெளிநாடுகளில் மேற்கொண்ட ஆகப் பெரிய மோசடிப் புலனாய்வுகளில் இதுவும் ஒன்று. தென்கிழக்காசியாவில் எல்லை தாண்டிய மோசடிக் கட்டமைப்புகள் வெகுவேகமாகப் பரவுவதை அது காட்டுவதாகச் சொல்லப்பட்டது.
சிங்கப்பூர் ஏற்கெனவே அந்தக் கட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு முன்னர் மலேசியர்கள் உட்பட 12 சந்தேக நபர்கள் சிங்கப்பூரில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மலேசியாவில் தேடப்படும் ஏழு பேரில் இருவரின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஒருவர், 25 வயது டாங் சூன் ஃபாய். மற்றவர், 31 வயது டாங் சூன் வா. இருவருக்கும் ஒரே குடும்பப் பெயர். சிலாங்கூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரே முகவரியை இருவரும் பயன்படுத்துவதும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தெரியவந்தது. மோசடிக் கட்டமைப்பில் இன்னொரு குடும்பத் தொடர்பு இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே சிங்கப்பூர்ச் சகோதரர்கள் இங் வெய் லியாங்கும் இங் வெய் காங்கும் வழிநடத்தும் மோசடிக் கும்பலுடன் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மலேசியாவில் தேடப்படும் ஏழு பேரும் அங்குதான் இருக்கிறார்களா வேறு எங்காவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறியத் தகவல்கள் திரட்டப்படுவதாக அந்நாட்டு வர்த்தகக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ருஸ்டி முகம்மது தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் கம்போடியாவில் இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தால், வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொள்வோம்,” என்றார் அவர்.

