தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: மீட்கப்பட்ட 300 குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படும்

1 mins read
e5841d70-3dfe-40b1-a37b-43ba040167a6
மலேசியாவின் ரவாங்கில் அமைந்துள்ள ஜிஐஎஸ்பி நிறுவனத்தின் தலைமையகம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புத்ராஜெயா: குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் (ஜிஐஎஸ்பி) நிறுவனத்தின் பராமரிப்பிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான கல்வியை இனி மலேசியக் கல்வி அமைச்சு பார்த்துக்கொள்ளும்.

முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தின்கீழ், வரும் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்படும் என்று மலேசியக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

“அக்குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடந்த 2024-2030 கல்வி உத்தித் திட்ட அறிமுக நிகழ்ச்சியின்போது அவர் கூறினார்.

சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் உள்ள, ஜிஐஎஸ்பி நிறுவனத்திற்குச் சொந்தமான 20 பராமரிப்பு இல்லங்களில் இம்மாதம் 11ஆம் தேதி மலேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடிச் சோதனை நடத்தியது.

அதன்மூலம், ஒன்று முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பதின்ம வயதினர் என 402 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பாதிப் பேர் சிறுமியர்.

‘ஆப்பரேஷன் குளோபல்’ என்ற பெயரில் இதுவரை நடத்தப்பட்ட நான்கு கட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதுமிருந்தும் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

கல்விச் சட்டம், கொள்கைகளின்கீழ் அக்குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், அவர்களுக்கு முறையான கல்வி கிடைக்காததைக் கல்வி அமைச்சு கடுமையானதாகக் கருதுகிறது என்று திருவாட்டி ஃபத்லினா சொன்னார்.

மேலும், அது குறித்து சட்டக் குழுவினர் விசாரித்து வருகின்றனர் என்றும் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்