பியூ தாய் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பெடோங்டார்ன் விலகல்

2 mins read
c0827df8-e06b-4840-80b4-4d05fc326bf7
பியூ தாய் கட்சி இந்த மாற்றத்தைச் சுதந்திரமாக நடத்தி ஒரு முழுமையான, சரியான புதிய கட்சியை உருவாக்க அனுமதிக்கும் வகையில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று திருவாட்டி பெடோங்டார்ன் விளக்கினார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் புதன்கிழமை (அக்டோபர் 22) அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் பியூ தாய் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தினார்.

வரவிருக்கும் முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க இந்த நடவடிக்கை அவசியம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

பியூ தாய் குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் திருவாட்டி பெடோங்டார்ன், ‘முழுமையான, சரியான புதிய கட்சியை’ உருவாக்கும் குறிக்கோளுடன், அக்டோபர் முற்பாதியில் அறிவிக்கப்பட்ட ஓர் உத்திபூர்வ சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான முதல் படியாக இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

“மக்களுக்கான உண்மையான மாற்றத்திற்கான புதிய, துணிச்சலான தொலைநோக்குப் பார்வையுடன், பியூ தாய் கட்சியின் மறுசீரமைப்பைத் தொடங்கும் நோக்கத்துடன், இன்று நான் பியூ தாய் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்,” என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கட்சி இந்த மாற்றத்தைச் சுதந்திரமாக நடத்தி ஒரு முழுமையான, சரியான புதிய கட்சியை உருவாக்க அனுமதிக்கும் வகையில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று திருவாட்டி பெடோங்டார்ன் விளக்கினார். அவர் கட்சி உறுப்பினராகவும் பியூ தாய் குடும்பத்தின் தலைவராகவும் தொடர்வார் என்பதை உறுதிப்படுத்தினார்.

கட்சியின் செயற்குழு மற்றும் எம்.பி.க்களுடன் நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கட்சியின் வேட்பாளர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதே திருவாட்டி பெடோங்டார்னின் முதன்மையான காரணம் என்று கட்சியின் தற்காலிக தலைமைச் செயலாளர் சொராவோங் தியென்தோங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“கட்சியைப் பாதுகாக்க தன்னால் ஏதாவது செய்ய முடிந்தால், அதைச் செய்வேன் என்று அவர் கருதுகிறார். அதனால்தான் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்,” என்று திரு சொராவோங் உறுதிப்படுத்தினார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து திருவாட்டி பெடோங்டார்ன் விலகியதால் கட்சியின் நிலைத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார். திருவாட்டி பெடோங்டார்ன் புதிய தலைமைக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய தலைவரையும் நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுப்பதற்காக பியூ தாய் கட்சி விரைவில் ஓர் அசாதாரண பொதுக் கூட்டத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்