வாஷிங்டன்: பெற்றோர் தங்களின் திறன்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் மனநலத்திலும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
‘ஃபிரான்டியர்ஸ் இன் சைக்காலஜி’ (Frontiers in Psychology) என்ற இதழில், கடந்த ஜூன் மாதம் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
பராமரிப்பாளர்கள், கைப்பேசிகள் போன்ற சாதனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் மனத்தில் பாதுகாப்பற்ற உணர்வை அதிகமாக்குகிறது.
அதோடு, ஆரோக்கியமான உறவுகளிலும்கூட, குழந்தைகளுக்குள் அதிகப் பதற்றத்தையும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் மனப்பான்மையையும் அது ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 600 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பெற்றோர் எப்போதும் கைப்பேசித் திரைகளையே பார்த்துக் கொண்டிருப்பதால், தாங்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்றும் குழந்தைகள் உணர்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊடக உளவியலாளரும் அடிமைத்தனம் குறித்த நிபுணரும், அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினருமான டோன் கிராண்ட், அந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.
பாதுகாப்பற்ற உணர்வோடு வளரும் ஒரு குழந்தைக்குத் தன்னம்பிக்கை அல்லது சுயமதிப்பு குறைவாக இருக்கலாம் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், மற்றவர்களோடு பழகுவதிலும் நெருக்கத்தை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் சிரமங்களை எதிர்நோக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பெற்றோர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை குழந்தைகள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள், அந்தப் பழக்கம் பெற்றோர் - குழந்தை இடையேயான உறவில் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஆகியவை குறித்து மிக விரிவான ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள், பதின்ம வயதினர் ஆகியோர் சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, அவர்களின் மின்னிலக்க அடிமைத்தனம் ஆகியவற்றில், நீண்ட காலமாகவே மனநல நிபுணர்கள் முக்கியக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒப்புநோக்க, பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மிகக் குறைந்த அளவில் கவனத்தைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

