பேங்காக்: அக்டோபர் 1ஆம் தேதி முதல் தாய்லாந்தின் வட்டார விமான நிலையங்கள் ஆறில் பயணிகள் கூடுதல் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
உள்ளூர் விமானச் சேவைகளில் பயணம் செய்வோர் 75 பாட் (S$3) செலுத்த வேண்டும். அனைத்துலக விமானச் சேவைகளில் பயணம் செய்வோரிடம் 425 பாட் வசூலிக்கப்படும்.
அதாவது கூடுதலாக 25 பாட் வசூலிக்கப்படவிருக்கிறது.
தாய்லாந்தின் விமான நிலையங்கள் துறை இதனை அறிவித்தது. அந்த ஆறு விமான நிலையங்களும் அத்துறையின் மேற்பார்வையில் இயங்குகின்றன.
கிராபி (KBV), சூராட் தானி (URT), உபோன் ரட்சதானி (UBP), கோன் கெய்ன் (KKC), நக்கோன் சி தம்மராட் (NST), ஃபிட்சனுலோக் (PHS) ஆகியவை அந்த விமான நிலையங்கள்.
இந்த ஆண்டு ஜூலை 1 முதல் விமான நிறுவனங்கள் பயணச் சீட்டுடன் சேர்த்து கூடுதல் பயணச் சேவைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன என்றும் அக்டோபர் 1 முதல் அந்த ஆறு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணம் செய்வோருக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.