தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டி‌ஷ் மருத்துவமனைகளின் தரம் சரிவு: கருத்தாய்வு

2 mins read
306a293c-5f52-4300-a6fe-98ba90a41351
இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவு. - படம்: இபிஏ

லண்டன்: பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை வாசல் வளாகங்கள் போன்ற தோதாக இல்லாத இடங்களில் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதாக தாதியர் தெரிவித்துள்ளனர் என்று வியாழக்கிழமை (ஜனவரி 16) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டி‌ஷ் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு சரியாகக் கையாளப்படவில்லை என்று அந்நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியல் கருத்தாய்வு ஒன்றில் பலர் குறிப்பிட்டனர். பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவைக்குக்கீழ் (NHS) உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் 10ல் ஒன்பது தாதியர் அவ்வாறு தெரிவித்தனர்.

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் அல்லது தோதாக இல்லாத இடங்கள் ஆகியவற்றில் தாங்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதாக கிட்டத்தட்ட 10ல் ஏழு (66.8 விழுக்காடு) தாதியர் கூறினர். வாசல் பகுதிகள், மாற்றியமைக்கப்பட்ட அலமாறிகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

“பிரிட்டன் முழுவதும் உள்ள 5,000க்கும் அதிகமான தாதியரின் மோசமான அனுபவங்கள், பராமரிப்புத் தரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவைக் காட்டுகின்றன. நோயாளிகள் அடிக்கடி ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்,” என்று ‘ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங்’ தாதியர் கல்லூரி (RCN) குறிப்பிட்டது.

பிரிட்டி‌ஷ் மருத்துவமனைகளில் வாசல் பகுதிகளில் நோயாளிகள் பராமரிக்கப்படுவது சாதாரணமாகிவிட்டது என்றும் அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அக்கல்லூரி எடுத்துரைத்தது. நெரிசலாக இருக்கும் இடங்களில் நோயாளிகளின் உயிர் காக்கும் சாதனங்களைத் தாதியரால் பயன்படுத்த முடிவதில்லை என்றும் சில வேளைகளில் நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசல் பகுதிகளில் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வது விதிவிலக்கல்ல என்றும் அது விதிமுறையாகவே மாறிவிட்டது என்றும் கிழக்கு இங்கிலாந்தில் தாதி ஒருவர் சொன்னார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இருந்த சுமார் 54,000 நோயாளிகள் மருத்துவனையில் மெத்தை கிடைக்க 12 மணிநேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் 23 விழுக்காடு அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்