பட்டாயா: தாய்லாந்தின் பட்டாயா நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்து இரவு நேரத்தில் சிங்கங்கள் கர்ச்சித்த சத்தத்தால் அப்பகுதி மக்கள் மிரண்டு போனதாகக் கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் அந்தச் சிங்கங்களைச் சோதிக்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பிப்ரவரி 10ஆம் தேதி அந்த வீட்டிற்குச் சென்றனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு (சிங்கப்பூரில் மாலை 4.30 மணி) நடத்தப்பட்ட சோதனைக்கு சிங்கங்களின் உரிமையாளரான 54 வயது திவருண் வைகுந்த நாடார் அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாகக் கூறப்பட்டது.
உரிய முறையில் அந்தச் சிங்கங்களுக்கு அடையாள வில்லைகள் (microchips) பொருத்தப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
குடியிருப்பாளர்களின் கவலை குறித்து அதிகாரிகள் தெரியப்படுத்தவே ஒரு வாரத்திற்குள் புதிய வீட்டுக்கு மாறிச்செல்ல நாடார் ஒப்புக்கொண்டார்.
அதற்குமுன் புதிய இடம் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உட்பட்டதா என்பதை அதிகாரிகள் சோதிப்பர். குடியிருப்புப் பகுதிகளிலிருந்து போதிய தொலைவில் அது அமைந்திருப்பதையும் உறுதிசெய்வர். இல்லாவிடில், பாதுகாப்பான பகுதிக்குச் சிங்கங்கள் மாற்றப்படும். நாடார் அவற்றைச் சென்றுபார்க்க அனுமதிக்கப்படுவார்.
சிங்கத்தைச் செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோர் அதற்குப் போதிய இடவசதி இருப்பதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் அண்டை வீட்டாருடன் முதலில் அதுகுறித்துக் கலந்துபேசுவதும் முக்கியம் என்று தாய்லாந்து அதிகாரிகள் நினைவுபடுத்தினர்.