பினாங்கு, கெடாவில் ஆண்டிறுதி வரை வெள்ளம் ஏற்படலாம்

1 mins read
77d4034b-4c31-41dd-9d73-abefeeb28646
லா நினா பருவநிலை நிகழ்வால் மலேசியாவில் பாதிப்பு. - படம்: அவுன் சுவான் / PenangToday Community / ஃபேஸ்புக்

ஜார்ஜ்டவுன்: லா நினா பருவநிலை நிகழ்வு காரணமாக மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பினாங்கு, கெடா மாநிலங்கள் முழு விழிப்புநிலையில் இருக்கின்றன. எல்லா செயல்பாட்டு அமைப்புகளும் மீட்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பினாங்கு முதல்வர் சோவ் கொன் இயாவ் தெரிவித்தார்.

பினாங்கில் மாநில, வட்டார அளவில் வெள்ளக் கட்டுப்பாட்டு நிலையங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும், வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுவோருக்கான 389 தற்காலிகத் தங்குமிடங்கள் குறுகிய காலத்தில் அமைக்கப்படும் என்றும் திரு சாவ் குறிப்பிட்டார்.

வெள்ளம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராய் இருக்குமாறும் விழிப்புடன் இருக்குமாறும் கெடா மாநில முதல்வர் முகம்மது சுஹாய்மி ஸெய்ன், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். கனமழையின்போது வாகனங்களை மெதுவாக ஓட்டுமாறும் வாகன விளக்குகளை எரிய வைக்குமாறும் அவர், ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தயாராக, எச்சரிக்கையுடன் இருப்பதுதான் லா நினா பருவநிலை நிகழ்வினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான முக்கிய வழிகள் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்