தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சமூக ஊடகத்தில் கிளம்பிய சர்ச்சை

புக்கெட் விமானநிலைய சுவரோவியத்தில் சிங்கப்பூரின் பெரனக்கான் ஓவியங்கள்

2 mins read
07d45587-d44d-4b22-b211-6e0cb0426cc5
சிங்கப்பூரின் சீன-போர்ச்சுகீசிய கடைத்தொகுதிகளுக்கு ஒத்த கட்டடக்கலை பாணியில் அமைந்த கடைத்தொகுதிகளை புக்கெட்டில் காணலாம் என்று பரிந்துரைக்க வேண்டுமென்றே அந்தப் படத்தைப் பயன்படுத்தியதாக தாய்லாந்து விமானநிலையம் கூறியது.  - படம்: EJIJUM PHUKET/FACEBOOK

பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் தீவு, விமான நிலைய சுவரோவியத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரின் பெரனக்கான் கடைவீடுகளின் படம் சமூக ஊடகத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தீவு ஈர்ப்புகளைச் சித்திரிக்கும் அந்த சுவரோவியத்தில் சைதரராம் கோயில், புக்கெட்டின் பெரிய புத்தர், புக்கெட் பழைய நகரம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அதில் ஜூ சியாட், கூன் செங் ரோட்டில் உள்ள சிங்கப்பூரின் வண்ணமயமான பெரனக்கான் கடைவீடுகளின் படமும் உள்ளது.

சிங்கப்பூர் அடையாளச் சின்னம் சேர்க்கப்பட்டது தொடர்பாக இணையத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், விமான நிலைய அறிக்கை ஒன்றில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது.

டிசம்பர் 16 அன்று ஃபேஸ்புக் பயனர் எஜிஜும் புக்கெட் என்பவர் இதை முதன்முதலில் சுட்டிக்காட்டினார். அவர் அந்தச் சுவரோவியம், அவமானமானது எனக் குறிப்பிட்டார்.

“அண்டைநாட்டிடம் இருந்து கடன்வாங்குவதற்குப் பதிலாக ஏன், நமது சிறந்த மாளிகைகள், கடைவீடுகள், சாலைகளைப் பயன்படுத்தக்கூடாது? இது அவமானகரமானது. தயவு செய்து அகற்றவும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்ததாக தாய்லாந்து ஊடகம் தெரிவித்தது.

புக்கெட் பழைய நகரத்தில் அதே மாதிரியான வடிவமைப்பைக் கொண்ட கடைவீடுகள் இருப்பதை அவர் சுட்டினார். அவரது பதிவு 1,300 பேரின் கவனத்தை ஈர்த்தது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மாலை 5 மணி அளவில் அதற்கு 182 கருத்துகள் பதிவாகியிருந்தன. 105 பேர் அதைப் பகிர்ந்திருந்தனர்.

விமான நிலைய நிர்வாகம் வேறொரு நாட்டை ஊக்குவிப்பதாக விமர்சித்த இணையவாசிகள் மன்னிப்புக் கோரினர்.

“சிங்கப்பூரை வரவேற்கிறோம்” என்று ஒருவர் கருத்துரைத்திருந்தார். “என்ன ஒரு அவமானம்?” என மற்றொருவர் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு தாய்லாந்து விமானநிலைய ஃபேஸ்புக் அளித்த பதிலில், இப்பிரச்சினை குறித்து புக்கெட் விமான நிலைய நிர்வாகத்திடம் தெரிவிப்பதாகக் கூறியது.

அந்தப் பதிவு போடப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான நிலையம் தனது சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்தது.

சிங்கப்பூரின் சீன-போர்ச்சுகீசிய கடைத்தொகுதிகளுக்கு ஒத்த கட்டடக்கலை பாணியில் அமைந்த கடைத்தொகுதிகளை புக்கெட்டிலும் காணலாம் என்று பரிந்துரைக்க வேண்டுமென்றே அந்தப் படத்தைப் பயன்படுத்தியதாக அது கூறியது.

விமான நிலையக் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களில் இதுவும் ஒன்று என்றும் அது கூறியது.

“குழப்பத்தை அல்லது தவறான புரிதலையோ ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறோம். அதைச் சரிசெய்வோம்,” என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்ததாக பேங்காக் போஸ்ட் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் இணையத்தளத்தின்படி, சிங்கப்பூரில் உள்ள அந்தக் கடைத்தொகுதிகள் 1920களில் கட்டப்பட்டவை. 1970கள் வரை பெரானாக்கான் இனத்தவர்கள் வாழ்ந்தவை. அவை, பிந்து பகர்-அல்லது ஆடும் கதவுகள், மலர் வேலைப்பாடுகளுடன் கூடிய கற்கள் போன்ற நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டவை.

குறிப்புச் சொற்கள்