மலேசியாவில் ஆட்சியைப் பிடிக்கப் பாதை வகுக்கும் பெரிக்கத்தான் நே‌ஷனல்

மலேசியாவில் ஆட்சியைப் பிடிக்கப் பாதை வகுக்கும் பெரிக்கத்தான் நே‌ஷனல்

2 mins read
78247574-02d9-4d5c-aa85-99a230b2b359
பாஸ் தலைவர் ஹாடி அவாங் (இடமிருந்து இரண்டாவது), வாவாசான் நெகாரா தலைவர் ஹம்ஸா ஸைனுதின் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஹம்ஸா ஸைனுதின்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இம்மாதம் முதல் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தொடங்கப்பட்ட ‘வாவாசான் நெகாரா’ (வாவாசான்) கட்சி மூன்று இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மூன்று என்பது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும் வாவாசான் பெற்ற வெற்றிகள் மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலுக்குள் பெரிய அரசியல் சீரமைப்பைக் குறிக்கின்றன. நாட்டின் அடுத்த பிரதமர் இக்கட்சியிலிருந்து வரக்கூடிய வாய்ப்பிருப்பதால், இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதின், வாவாசான் கட்சியைத் தொடங்கினார்.

நெகிரி செம்பிலானில் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த இந்தப் புதிய கட்சி, தான் போட்டியிட்ட நான்கு இடங்களில் மூன்றில் வெற்றி பெற்றது. ஆனால் இதற்கு நேர்மாறாக, தான் போட்டியிட்ட 24 இடங்களிலும் பெர்சத்து கட்சி தோல்வியடைந்தது.

முதல் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரிக்கத்தான் நே‌ஷனல், மிதமான மலாய் தேசியவாத முகத்தை வழங்க பெர்சத்து கட்சியைச் சார்ந்திருந்தது. அதேநேரம் தேர்தலில் வலிமையோடு திகழ, பாஸ் கட்சியை அது நம்பியிருந்தது.

வீழ்ச்சியடைந்துவரும் பெர்சத்து கட்சிக்கு மாற்றாக வாவாசான் அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாவாசானில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த பிறகு, பெர்சத்து ஆறு மன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.

பாஸ் கட்சியின் பாரம்பரிய ஆதரவுத் தளத்திற்கு அப்பால் பெரிக்கத்தான் நே‌ஷனலின் செல்வாக்கை விரிவுபடுத்தப் புதிய கட்சி முயலும். அடுத்த பொதுத் தேர்தலில் மிதவாத மலாய்க்காரர்களாலும் மலாய்க்காரர் அல்லாதவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவும் இந்தப் புதிய கட்சி முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் 2028ன் தொடக்கத்திற்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

​​”பெரிக்கத்தான் நே‌ஷனல், மத்திய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் அவர்கள் பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக அறிவிக்க மாட்டார்கள். ஏனென்றால் அது மலேசியர்கள் பலரிடையே அவ்வளவாக வரவேற்பைப் பெறாது என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் சியாஸா ‌ஷுக்ரி கூறினார்.

“எனவே அவர்கள் அதே முறையைத்தான் பின்பற்றுவார்கள். இதற்கு முன்பு பெர்சத்து கட்சித் தலைவர் முகைதின் அவர்களின் பிரதமர் வேட்பாளராக இருந்தார் என்றால், இப்போது பெரும்பாலும் வாவாசான் தலைவரான ஹம்ஸாதான் அதற்கான வாய்ப்பைப் பெறக்கூடும்,” என்று அவர் சொன்னார்.

திரு ஹம்ஸாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராய் இருப்பதாக பாஸ் கட்சியும் கோடிகாட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்