பெர்லிஸ் முதல்வர் பெர்சத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்லிஸ் முதல்வர் பெர்சத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

படம்: பெர்னாமா

21 Oct 2026 - 5:06 pm

1 mins read

கங்கார்: மலேசியாவின் பெர்லிஸ் மாநில முதல்வர் அபு பக்கர் ஹம்ஸாவை, கட்சியின் தேர்தல் கால அளவுகளின்படி இரண்டு தவணைகளுக்குப் பெர்சத்து கட்சி தனது அடிப்படை உறுப்பியத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை அக்டோபர் 13ஆம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

கங்கார் பெர்சத்து கட்சியின் பகுதித் தலைவருமான அபு பக்கருக்கு, இந்த இடைநீக்கம் குறித்த கடிதம் அக்டோபர் 14ஆம் தேதியிட்டு அனுப்பப்பட்டது. இதில் பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் முகம்மது ராட்ஸி மனான் கையெழுத்திட்டுள்ளார்.

முதல்வரின் இடைநீக்கம் குறித்த கடிதம் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவலாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து, இச்செய்தியைப் பெர்லிஸ் மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் இஸிஸாம் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று ‘சினார் ஹரியான்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இடைநீக்கக் காலத்தின்போது, அபு பக்கர் வகித்து வந்த அனைத்துக் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், கட்சியின் பெயரில் எவ்வித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்ட 14 நாள்களுக்குள், கட்சியின் மேல்முறையீட்டு வாரியத்திடம் மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்