பேங்காக்: அமெரிக்க அதிபருடன் முறைசாரா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட கத்தார் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென தாய்லாந்து நீதிமன்றத்திடம் அந்நாட்டு முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவருடைய அந்தக் கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தாய்லாந்தின் கடுமையான அரச அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு தக்சின், தமது பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தார்.
கத்தாரின் லுசைல் அரண்மனையின் அழைப்பின் பேரில் திரு டிரம்ப் கத்தார் செல்வதாகவும் அங்கு நடக்கும் விருந்தில் அவர் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட அழைப்பின் பேரில் டிரம்ப் மேற்கொள்ளும் பயணம் அது எனக் கூறிய நீதிமன்றம், அது அதிகாரபூர்வ அரசதந்திர பயணமன்று எனக் குறிப்பிட்டது.
அவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, கத்தாருக்குச் செல்லத் திரு தக்சின் விடுத்த கோரிக்கையில் வலுவான காரணம் இல்லை எனச் சொல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

