மணிலா: தென்சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் கடற்படைக் கப்பல் ஒன்று அதன் வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ‘சீனக் கடற்படைப் போராளி’ கப்பல் வேண்டுமென்றே பக்கவாட்டில் அதை மோதிச் சென்றதாக பிலிப்பீன்சின் மீன்வளப் பணியகம் தெரிவித்தது.
திட்டு தீவுப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, பிலிப்பீன்ஸ் கப்பலின் முற்பகுதி வெளிப்புறத்தில் குழிகள் ஏற்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் நீர் வளங்கள் பணியகம் அறிக்கை விடுத்தது.
தென்சீன அம்சங்கள் தொடர்பாக சீனாவும் பிலிப்பீன்சும் அடுத்தடுத்து மோதிக்கொண்டு வருகின்றன. சீனக் கடலோரக் காவற்படையின் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிலிப்பீன்ஸ் குற்றம் சாட்டி வர, தொடர்ந்து ஆத்திரமூட்டும், எல்லை ஊடுருவும் சம்பவங்களால் சீனாவும் கொதித்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்சீனக் கடலை ஆக்கிரமிக்கும் வகையில் ‘கடற்படைப் போராளி’க் கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளதாக பிலிப்பீன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அவை ராணுவமல்லாத கப்பல்கள் என சீனா கூறிவருகிறது.
சீனக் கப்பல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பிலிப்பீன்ஸ் கப்பலுக்கு மிக அருகில் சென்றதையும் பின்னர் மோதிவிட்டுச் சென்றதையும் காட்டும் காணொளி ஒன்றை பணியகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாகக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

