மணிலா: பிலிப்பீன்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ராணுவங்கள் பிலிப்பீன்சையும் தைவானையும் பிரிக்கும் ‘பாஷி கால்வாய்’ (Bashi Channel) பகுதியில் இந்த வாரம் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பீன்சின் வடகோடிப் பகுதியான பத்தானஸ் தீவுகளுக்கு மேலே மூன்று நாடுகளின் விமானங்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டன.
சிக்கலான கடல்சார் சூழல்களில் தடையின்றி இணைந்து செயல்படும் திறனை வெளிப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.
பிலிப்பீன்சுக்கும் தைவானுக்கும் இடையே 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.
தைவானைத் தமது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் அதைக் கைப்பற்றுவதற்குத் தேவையான பலத்தைப் பிரயோகிக்கவும் தயங்காது எனக் கூறி வருகிறது.
“லூசான் பகுதிக்கு வடக்கே, பிலிப்பீன்ஸ் எல்லைக்குட்பட்ட ஆகாயப் பரப்பு, கடல் பகுதியில் வான்வழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று தெரிவித்த பிலிப்பீன்ஸ் ராணுவம், கடற்படைக் கப்பல்கள் பத்தானஸ் தீவுச் சங்கிலித் தொடருக்கு மேற்கே நிலைகொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது.
ஆயுதப் படைகளின் பொது விவகாரத் தலைவர் கர்னல் ஜெர்செஸ் டிரினிடாட் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “குறிப்பிட்ட இந்தச் செயல்பாட்டு மண்டலத்தில் பல்நோக்கு கடல்சார் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை,” என்றார்.

