பிலிப்பீன்ஸ் குப்பைக் கிடங்கில் புதையுண்ட ஊழியர்கள்; ஒருவர் பலி

1 mins read
c57a1e6b-b970-4f4a-88d2-bdf5f0e03ab0
கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் மணிலாவில் நடந்த இதேபோன்ற விபத்தில் 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர். - படம்: மலாய் மெயில்

மணிலா: பிலிப்பீன்சின் சிபு தீவில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கு வியாழக்கிழமை (ஜனவரி 8) சரிந்ததில் பல துப்புரவுப் பணியாளர்கள் புதையுண்டனர்.

பன்னிரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியானார் என்று நகரின் துணைப் பொதுத் தகவல் அதிகாரி ஜேசன் மொராட்டா தெரிவித்தார்.

சிபு நகரில் உள்ள ‘பினாலிய்’ எனப்படும் தனியார் குப்பைக் கிடங்கில் இந்த விபத்து நடந்துள்ளது. நான்கு மாடி உயரத்துக்கு மலைபோல் நிறைந்திருந்த குப்பை, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது சரிந்து கொட்டியது.

மீட்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்நகர மேயர் நெஸ்டர் ஆர்க்கிவல் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குப்பையின் பாரம் தாங்காமல் அது கொட்டியபோது பல துணைக் கட்டமைப்புகள் நசுங்கி உடைந்திருப்பது வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிந்தது. அந்தக் கட்டமைப்புகளில் அலுவலகங்களும் ஊழியர்களின் அறைகளும் செயல்பட்டுவந்தன.

அதனை இயக்கிவந்த நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் ஒரு நாளில் அங்கு 1,000 டன் அளவுக்கு குப்பைகள் குவித்து வைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பணியில் இருந்தோர் அருகில் உள்ள கொன்சலேஷியன் நகரில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

மழை பெய்யாத வேளையில் இது நிகழ்ந்துள்ளதால் அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது. சிபு தீவில் கடந்த ஆண்டு இரு சூறாவளிகளும் நிலநடுக்கமும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்