உளவுத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்க பிலிப்பீன்ஸ் திட்டம்

2 mins read
2ddae330-cc55-469e-a171-f17e0944b9a2
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் டெங் யுவான்கிங் (நடுவில்), பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் உள்ள நீதித்துறை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: இபிஏ

மணிலா: பிலிப்பீன்சில், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதனால், அந்நாட்டின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு உளவுத்துறையால் அச்சுறுத்தல் ஏற்படும் என பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

உளவாளிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் பொருட்டு பிலிப்பீன்ஸ் அரசிடம் உளவுத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தென்சீனக் கடலில் பதற்றம் அதிகரித்து வருவதால், பிலிப்பீன்சின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் ஊடுருவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக பிலிப்பீன்ஸ் அரசு சந்தேகிப்பதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் ஜோனத்தன் மலாயா கூறினார்.

மணிலாவில் ஜனவரி 29ஆம் தேதி நடந்த கடல் பூசல் குறித்த பொது மன்றத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 17ஆம் தேதி, சீன உளவாளி டெங் யுவான்கிங்கையும் அவரது இரு பிலிப்பீன்ஸ் கூட்டாளிகளையும் கைது செய்யப்பட்டதை சீனா மேற்கொண்டுவரும் உளவு நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனக் கூறிய திரு ஜோனத்தன், பிலிப்பீன்சின் காலாவதியான உளவுச் சட்டங்களுக்கு மேலும் பலம் கொடுக்க வேண்டியதன் தீவிரத்தை இது காட்டுகிறது என்றார்.

நிலுவையில் உள்ள இரண்டாம் உலகப் போர் காலகட்ட உளவுச் சட்டத்தைத் திருத்தும் மசோதாவையும் வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் நாட்டில் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ள மற்றொரு மசோதாவையும் நிறைவேற்றுமாறு பிலிப்பீன்ஸ் அரசாங்கத்திடம் அவர் கேட்டுகொண்டார்.

பொது மன்றத்தில் கலந்துகொண்ட மற்றொரு நபரான பிலிப்பீன்ஸ் முன்னாள் உச்சநீதிமன்ற இணை நீதிபதி அன்டோனியோ கார்பியோவும் திருத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தை அரசாங்கம் புதுப்பிக்க வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்