மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கடலோரக் காவல் தொடர்பில் சீனா முன்வைக்கும் புதிய விதிமுறைகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்தப் புதிய விதிமுறைகளின்கீழ் தென்சீனக் கடலில் வெளிநாட்டினரைத் தடுத்து வைக்க முடியும்.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்குச் சீனா உரிமை கோருகிறது. ஆனால் பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட இதர நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கடலோரக் காவல் சட்டம் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சீனா புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. எல்லையைக் கடந்து சீன நீர்ப்பரப்பினுள்ளே செல்லும் வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கவும் புதிய விதிமுறை அனுமதி வழங்குகிறது.
தென்சீனக் கடலில் தனது தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்தினுள் வெளிநாட்டுக் கப்பல்கள் அத்துமீறி நுழைவதாகச் சீனா பலமுறை சாடியுள்ளது. இதன் தொடர்பில் சென்ற ஆண்டு பிலிப்பீன்சும் சீனாவும் பலமுறை வாக்குவாதம் செய்தன.
புருணைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள திரு மார்கோஸ், “எங்கள் குடிமக்களைத் தடுத்து வைப்பதாக மிரட்டல் விடுக்கும் புதிய கொள்கை நிலைமையை மோசமாக்குகிறது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சீனாவின் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த பிலிப்பீன்ஸ் முயலும் என்றும் தென்சீனக் கடலில் ஃபிலிப்பீன்சின் மீனவர்கள் மீன்பிடிக்க வகைசெய்யும் என்றும் அதிபர் மார்கோஸ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதல் நடவடிக்கைகளைச் சமாளித்துவிட்டால் அமைதியான முறையில் அவரவர் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம் என்றார் அவர்.
மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.


