இன்றைய மின்னிலக்க யுகத்தில் கணினி, கைப்பேசிகளுக்கு அப்பால் நம் வீட்டிலுள்ள மின்விசிறி, சலவை இயந்திரம், கண்காணிப்பு கேமராக்கள் எனப் பல சாதனங்களும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (IoT - இணையவழி இயங்கும் சாதனங்கள்) எனப்படுகிறது.
இதனுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இணையும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) மூத்த ஆய்வாளர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன், தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கான நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
மின்சாரச் சேமிப்பில் ‘ஏஐ’ புரட்சி
முன்பெல்லாம் ‘ஐஓடி’ உணர்கருவிகள் வெப்பநிலை குறித்த தரவுகளைச் சேகரித்து, ஏற்கெனவே எழுதப்பட்ட விதிகளின்படியே செயல்பட்டன. ஆனால், ‘ஏஐ’ இணைந்த பிறகு சூழ்நிலைக்கு ஏற்பச் சுயமாக முடிவெடுக்கும் திறன் அவற்றுக்கு உருவாகியுள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூர்க் கட்டடங்களில் செலவாகும் மொத்த மின்சாரத்தில் ஏறத்தாழ 60 விழுக்காடு குளிரூட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் சுட்டினார்.
கட்டடத்தில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை, அவர்களின் வசதிக்கு ஏற்ப வெப்பநிலையைக் கட்டுப்படுத்த ‘மாடல் பிரெடிக்டிவ் கன்ட்ரோலர்’ (Model Predictive Controller) தொழில்நுட்பத்தைத் தங்கள் குழுவினர் பயன்படுத்தியுள்ளனர் என்றார் முனைவர் பாஸ்கரன். மேம்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஓர் அமைப்பின் மாதிரியைப் (model) பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை முன்கூட்டியே கணித்து, சிறந்த கட்டுப்பாட்டு முடிவை எடுக்கிறது.
இந்த முறையின்கீழ், ஒவ்வோர் ஆறு நிமிடத்திற்கும் ஒருமுறை ‘ஏஐ’ இயங்கி, அடுத்த ஒரு மணி நேரத்திற்கான குளிரூட்டல் தேவையைக் கணிப்பதன் மூலம், 20 முதல் 60 விழுக்காடு வரை மின்சாரத்தைச் சேமிக்க முடிந்துள்ளது என்று முனைவர் பாஸ்கரன் குறிப்பிட்டார். வீடுகளிலும் நாம் வெளியேறியதும் தேவையற்ற மின்சாதனங்களை அணைத்து, வீடு திரும்புமுன் குளிரூட்டியை இயக்குவதன் மூலம் மின்கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் என்றார் அவர்.
‘ஃபிசிக்கல் ஏஐ’, தானியங்கி வாகனங்கள்
‘சேட்ஜிபிடி’ போன்றவை திரை சார்ந்த ‘ஏஐ’ என்றால், நடைமுறை உலகில் உணர்ந்து, சிந்தித்து, செயல்படும் ரோபோக்கள், தானியங்கி வாகனங்கள், அறிவார்ந்த கட்டடங்கள் போன்றவை ‘ஃபிசிக்கல் ஏஐ’ (Physical AI) எனப்படுகின்றன.
அடுத்த 50 ஆண்டுகளில் ‘ஃபிசிக்கல் ஏஐ’தான் உலகை ஆளப்போகிறது. இதனைக் கருத்தில் கொண்டே சிங்கப்பூரின் தேசிய ரோபோடிக் திட்டம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 10,000 மாணவர்களை இத்துறையில் தயார்ப்படுத்தவுள்ளது என்பதை முனைவர் பாஸ்கரன் சுட்டினார். தானியங்கி வாகனங்களும் ‘ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லேர்னிங்’ (Reinforcement Learning) எனப்படும் வலுவூட்டல் கற்றல் மூலம் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்கின்றன என்று அவர் விளக்கினார்.
முதியோர் பராமரிப்பு
2030ல் சிங்கப்பூரில் நால்வரில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என்பதைச் சுட்டிய அவர், தனியாக வசிக்கும் முதியவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பாதிப்பின்றி, கேமராக்களுக்குப் பதிலாக ‘மில்லிமீட்டர் வேவ்’ (mmWave) உணர்கருவிகளைப் பயன்படுத்தலாம் என்றார். மேலும், இது இரண்டு சென்டிமீட்டர் துல்லியத்துடன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, இதயத் துடிப்பைக் கண்காணிக்கவும், கீழே விழுந்தால் உறவினர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் உதவும் என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் மனித வடிவ ரோபோக்களும் (Humanoids) முதியோருக்குத் துணை நிற்கும் என்று சொன்ன முனைவர் பாஸ்கரன், சாலைகளில் உள்ள உணர்கருவிகள், செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய மின்னியல் சாலைக்கட்டண ('இஆர்பி’) முறை போன்றவை மூலம் போக்குவரத்து நெரிசலையும் கரிம வெளியேற்றத்தையும் சிங்கப்பூர் வெற்றிகரமாகக் குறைத்து வருகிறது என்று கூறினார்.
எதிர்கால 6G தொழில்நுட்பம்
வீட்டுச் சாதனங்களை இணையத்தில் இணைக்கும்போது ‘ரவுட்டர்’ கடவுச்சொற்களை மாற்றுவது, இரண்டு அடுக்குப் பாதுகாப்பு (2FA), மென்பொருள் புதுப்பிப்புகள் (Updates) மூலம் இணையத் தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என்று அவர் எடுத்துரைத்தார்.
“எதிர்காலத்தில் 6G தொழில்நுட்பம் வரும்போது, ஹாலோகிராம் (Hologram) வழியாகத் தொலைதூரத்தில் வசிக்கும் முதியவர்களுடன் நேரில் பேசுவது போன்ற அனுபவங்கள் சாத்தியமாகும். ராணுவம் போன்ற துறைகளில் ‘ஏஐ’ பயன்படுவது கவலை அளித்தாலும், மருத்துவம், எரிசக்திச் சேமிப்பு என மனித வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுவதற்கு மட்டுமே ‘ஏஐ’ பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் முனைவர் பாஸ்கரன்.
