கவிஞர் சேரன் காலமானார்

கவிஞர் சேரன் காலமானார்

தமிழ் உலகிலும் அனைத்துலக அளவிலும் ஈழப் போர், இலங்கையின் தமிழ்க் கவிதை குறித்து கவனத்தைக் குவித்ததில் சேரனின் கவிதைகளுக்குப் பங்குண்டு.
1 of 2
கோப்புப் படம்: தமிழ் முரசு
கோப்புப் படம்: விகடன்.

19 Nov 2026 - 12:05 pm

4 mins read

கவிஞர் சேரன் உடல்நலக் குறைவால் கனடா, டொரான்டோவில் புதன்கிழமை (நவம்பர் 18) இரவு காலமானார். அவருக்கு வயது 66.

“சிறுநீரகப் பிரச்சினை, ஈரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை அவர் முன்னர் செய்திருந்தார்,” என்று திரு கனடா மூர்த்தி தெரிவித்தார்.

முக்கிய உலகத் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர் கவிஞர் சேரன். நாடகம், உரை, கட்டுரை என பல தளங்களிலும் உணர்ச்சியும் தமிழ்ச் செறிவும் மிக்க தனித்துவமான பாணியை உருவாக்கியவர்.

1980கள் தொடங்கி இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரைக் கவிதைகள், கட்டுரைகள், உரைகள் வழியாகப் பதிவு செய்துவந்தவர். தமிழ் உலகிலும் அனைத்துலக அளவிலும் ஈழப் போர், இலங்கையின் தமிழ்க் கவிதை குறித்து கவனத்தைக் குவித்ததில் சேரனின் கவிதைகளுக்குப் பங்குண்டு.

சிங்கப்பூரும் சேரனும்

சிங்கப்பூருக்கு நன்கு அறிமுகமான கவிஞர் சேரன், சிங்கப்பூர் இலக்கியங்களை வாசித்து அதுகுறித்து பொதுவெளியில் உரையாடும் மிகச் சில தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவர்.

1997ல் சிங்கப்பூருக்கு வந்தபோது.  இடமிருந்து மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமி, சேரன், கனடா மூர்த்தி.
1997ல் சிங்கப்பூருக்கு வந்தபோது. இடமிருந்து மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமி, சேரன், கனடா மூர்த்தி. - கோப்புப் படம்: கனடா மூர்த்தி

சிங்கப்பூருக்கு 1997ல் முதன்முதலில் சிங்கப்பூருக்கு சேரன் வந்ததை நினைவுகூர்ந்த சேரனின் 50 ஆண்டு கால நண்பரான கனடா மூர்த்தி, அப்போது மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமி பல்வேறு சந்திப்புகளை ஏற்படுத்தியதையும், கவிமாலை அமைப்பிலும் தேசிய கல்விக் கழகத்திலும் அவர் உரையாற்றியதையும் குறிப்பிட்டார்.

“அதன்பின்னர் அடிக்கடி சிங்கப்பூர் வந்த சேரன் இலக்கிய அமைப்புகள், படைப்பாளர்களுடன் அணுக்கமான உறவைப் பேணி வந்தார். சிங்கப்பூர் தமிழ் உலகைக் குறித்து மிகுந்த மதிப்பும் மரியாதை கொண்டவர். அதுகுறித்து விதைந்துரைப்பார்,” என்றார் திரு மூர்த்தி.

சேரன் தமிழ் முரசு நாளிதழில் 2005 முதல் 2006 வரை மாதம் இருமுறை ‘உயிர் கொல்லும் வார்த்தைகள்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2005ல் பங்கேற்ற அவர் தொடர்ந்து, பல சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் 2011ஆம் ஆண்டு முன்னெடுத்த முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முனைவர் அருண் மகிழ்நனுடன் இணைந்து ஒருங்கிணைத்தவர்களில் சேரனும் ஒருவர்.

எழுத்தாளர் கழகம் 2011ல் சிங்கப்பூரில் நடத்திய முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நிரல் குழு உறுப்பினர் என்னும் வகையில் நிறைவுக் கலந்துரையாடலில் பங்கேற்ற சேரனின் கவிதை நூல் ஒன்று மாநாட்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.  படத்தில் இடமிருந்து இராம. கண்ணபிரான், மாலன், அருண் மகிழ்நன், நா.ஆண்டியப்பன், சேரன், மறைந்த மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.
எழுத்தாளர் கழகம் 2011ல் சிங்கப்பூரில் நடத்திய முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நிரல் குழு உறுப்பினர் என்னும் வகையில் நிறைவுக் கலந்துரையாடலில் பங்கேற்ற சேரனின் கவிதை நூல் ஒன்று மாநாட்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. படத்தில் இடமிருந்து இராம. கண்ணபிரான், மாலன், அருண் மகிழ்நன், நா.ஆண்டியப்பன், சேரன், மறைந்த மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு. - கோப்புப் படம்: தமிழ் முரசு
எழுத்தாளர் கழகம் 2011ல் சிங்கப்பூரில் நடத்திய முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் “தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்” என்னும் அமர்வில் கட்டுரை படைத்ததுடன் தாயகம் “கடந்த தமிழ் இலக்கியம் - புதிய போக்குகள், புதிய பாதைகள்” என்னும் அமர்வுக்கு தலைமையேற்றார்.
எழுத்தாளர் கழகம் 2011ல் சிங்கப்பூரில் நடத்திய முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் “தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்” என்னும் அமர்வில் கட்டுரை படைத்ததுடன் தாயகம் “கடந்த தமிழ் இலக்கியம் - புதிய போக்குகள், புதிய பாதைகள்” என்னும் அமர்வுக்கு தலைமையேற்றார். - கோப்புப் படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

“அம்மாநாட்டின் கட்டுரைத் தேர்வுக் குழுவில் இடம்பெற்று மாநாட்டின் வெற்றிக்கு அரும்பணியாற்றினார் கவிஞர் சேரன்,” என்ற எழுத்தாளர் கழகத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான நா. ஆண்டியப்பன், “அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பு,” என்று வருந்தினார்.

“தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்” என்னும் அமர்வில் கட்டுரை படைத்ததுடன் தாயகம் “கடந்த தமிழ் இலக்கியம் - புதிய போக்குகள், புதிய பாதைகள்” என்னும் அமர்வுக்குத் தலைமையேற்றார். அத்துடன் நிரல் குழு உறுப்பினர் என்னும் வகையில் நிறைவுக் கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். அவரது கவிதை நூல் ஒன்று மாநாட்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தங்கமுனை விருது, இலக்கியப் பரிசு நடுவர் குழுக்களில் இருந்துள்ளார். தங்க முனை பரிசு பெற்றவர்களுக்கான படைப்பிலக்கிய வழிகாட்டியாகவும் சேரன் பங்களித்துள்ளார்.

கவிஞர் சேரனுடன் தேசிய அளவிலான தமிழ் இலக்கியப் போட்டித் தேர்வுக் குழுக்களில் அவருடன் நடுவராக இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்த கவிஞர் நெப்போலியன், “எனக்கும் அவருக்குமான இலக்கிய உரையாடல்களில் கருத்தியல் முரண்கள் இருந்தபோதும் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்தியம்பும் உணர்வாளர் சேரன்,” என்றார்.

“புலம்பெயர் யுத்தக் கவிதைகளில் தவிர்க்க முடியாத ஆளுமையான சேரன், தனித்துவமான கவிதை நிகழ்த்துதல் பாணியைக் கொண்டவர். கவிதை, ஓவியம், உரைநடை, நாடகம் எனப் பல தளங்களில் மரபும் நவீனமும் கலந்து புரட்சிகரமாகப் படைத்தவர். பேராசிரியராகவும் ஈழத்து உணர்வாளராகவும் திகழ்ந்த உருத்திரமூர்த்தி சேரனின் மறைவு அவரது படைப்புகள் வழியே நம்மை ஆற்றுப்படுத்தும். ஒரு கவிஞனின் மரணம் என்பது அவனது கவிதைகளின் மறுபிறப்பு என்பதால், சேரன் நம்மோடு என்றும் கவிதையாக வாழ்வார்,” என்றார் நெப்போலியன்.

கவிதைகள், கட்டுரைகள்

இவர் தமிழில் எட்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நான்கு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கவிஞர் முருகையனுடன் இணைந்து சேரன் 1985ல் தொகுத்து ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பு ஈழப்போரையும் வாழ்வையும் உயிர்ப்புடன் உணர்த்தும் மிக முக்கியமான ஈழத்துக் கவிதைத் தொகுப்பு.

“முனைவர் சேரன் தலைசிறந்த கவிஞராக இருந்ததோடல்லாது, பல்கலைக் கழக ஆசிரியர், சமூக வளர்ச்சியாளர், இளைஞரின் துருவ நட்சத்திரம், விடுதலைப் போராளி என்று பல துறைகளில் ஒர் உலக முன்னோடியாக விளங்கியவர், அவர் மறைவு மாபெரும் இழப்பு,” என்றார் அவருடன் இலக்கிய நிகழ்வுகளில் பணியாற்றியுள்ள சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி திரு அருண் மகிழ்நன்.

ஈழத்தில் பிறந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம், அளவெட்டியில் 1960ல் பிறந்த சேரனின் தந்தை கவிஞர் உருத்திரமூர்த்தி, ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.

1990களில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த சேரன், யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்திலும் பின்னர் வின்சர் பல்கலைக்கழகத்திலும் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

சேரனின் மனைவி ஷேர்ரி எய்கல். பிள்ளைகள் அஞ்சானி, எல்லான். உடன்பிறந்தவர்கள் கவிஞர் அவ்வை, இனியாள், பாண்டியன், சோழன்.

குறிப்புச் சொற்கள்