மணிலா: பிலிப்பீன்ஸ் காவல்துறையில் கிழக்கு வட்டாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் எட்டுப் பேர் பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
அந்த அதிகாரிகள், ‘பாசிக் சிட்டி’ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திருடியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் உள்நாட்டு விவகாரச் சேவைத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம்.
பாதிக்கப்பட்டோர் அத்துறையிடம் புகாரளித்ததை காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பிரிகிடோ துலே, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, திருட்டு, குடியிருப்புப் பகுதியில் விதிகளை மீறி நுழைந்தது ஆகியவை தொடர்பில் உள்ளூர் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் அந்த எட்டுப் பேர் மீதும் புகாரளிக்கப்பட்டிருப்பதை ‘பாசிக் சிட்டி’ காவல்துறைத் தலைவர் கர்னல் ஹெண்ட்ரிக்ஸ் மங்கள்தான் உறுதிசெய்திருந்தார்.
தீவிரமற்ற தவறான நடத்தை முதல் தீவிரமான ஒழுக்கக்கேடு, காவல்துறை அதிகாரிக்கான தகுதியை இழத்தல் போன்றவை தொடர்பான இவ்வழக்கில் அந்த அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் திரு துலே கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) அந்த எட்டுப் பேரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற போர்வையில் ஒரு வீட்டினுள் நுழைந்தனர். ஆனால், அதற்கான ஆணையை அவர்கள் காட்டவில்லை. அந்த வீட்டின் குடியிருப்பாளர்களிடமிருந்து 500,000 பிலிப்பீன்ஸ் பெசோ (S$10,900) மதிப்பிலான நகைகளை அவர்கள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது.
இச்சம்பவத்தை அடுத்து எட்டுப் பேரும் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் காவல்துறை அவர்களுக்கு வழங்கிய ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

