வாஷிங்டன்: அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில் அடைந்த வியக்கத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினரை அதிபர் டோனல்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
அத்துடன், ஈரான் மீதான போர் தமது குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், தமது அதிபர் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளைத் தலைகீழாக மாற்றியுள்ள தேர்தல் முடிவுக்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க 80 வயது டிரம்ப் மறுத்துவிட்டார். மாறாக, அவர் அந்தப் பழியைத் தமது சகக் குடியரசுக் கட்சியினர் மீது சுமத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
“ஜனநாயகக் கட்சியினருக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் நன்கு செயல்பட்டுள்ளனர்,“ என்று ‘ஃபாக்ஸ் நியூஸ் டெமோக்ரசி 26’ உடனான தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் கூறினார்.
“அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக இந்த வெற்றிக்காகக் காத்திருந்தார்கள். இறுதியில் அதை அடைந்தும் விட்டார்கள். ஆனால், இதனை எனக்கு எதிரான தனிப்பட்ட பின்னடைவாக நான் கருதவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
இடைத்தவணைத் தேர்தல் பிரசாரத்தின் பெரும்பாலான நேரங்களில் ஜனநாயகக் கட்சியினரைக் கம்யூனிஸ்டுகள் என்றும் இஸ்லாமியர்கள் என்றும் முத்திரை குத்தி விமர்சித்த டிரம்பிடமிருந்து, இத்தகைய பாராட்டுகள் வெளிவந்தது மிகவும் அசாதாரணமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் தோல்வியைப் போலன்றி, தற்போதைய தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார். அதோடு, நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதையும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
