வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜிங்பிங்கை அடுத்த வாரம் தென்கொரியாவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தலைவர்களின் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட அதிபர் டிரம்ப் முயற்சி செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேளான் பொருள்கள் முதல் அணுவாயுதங்கள் வரையெனப் பல இறக்குமதி ஏற்றுமதி திட்டங்கள் குறித்து திரு டிரம்ப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் சீனா சில அரிதான கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதாக அறிவித்தது. அது அமெரிக்காவைச் சினமூட்டியது.
“அரிதான கனிம வளங்களை நிறுத்திவைப்பது சில தடங்கலை மட்டும்தான் ஏற்படுத்தும். ஆனால் வரிவிதிப்பு என்பது கடுமையான ஒன்று,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க விவசாயிகள் அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, சோயா பீன்ஸ்களை சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் திரு டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையால் சீனா அமெரிக்க விவசாயிகளிடம் வாங்கும் சோயா பீன்ஸ்களைக் குறைத்துள்ளது.
அதேபோல் சீனாவுடன் அணுவாயுதம் தொடர்பான ஒப்பந்தமும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் மாபெரும் பொருளியலாக உள்ள அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக வர்த்தகப் போர் நடந்து வருகிறது.
அண்மையில் சீனாமீது கூடுதலாக 100 விழுக்காடு இறக்குமதி வரியை அறிவித்தார் அதிபர் டிரம்ப். அது நவம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவுடனான மோதலைக் குறைக்க அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் மற்றும் வர்த்தக மூத்த அதிகாரி ஜேமிசன் கிரிர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சீனா அரிய வகைக் கனிமங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது அவர்கள் பயணத்தின் நோக்கம். உடன்பாடு எட்டாவிட்டால் அமெரிக்கா சீனாமீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

