விசாரணையில் சிக்கியுள்ள என்விடியா தலைமை நிர்வாகிக்கு டிரம்ப் ஆறுதல்

விசாரணையில் சிக்கியுள்ள என்விடியா தலைமை நிர்வாகிக்கு டிரம்ப் ஆறுதல்

படம்: ராய்ட்டர்ஸ்

10 Nov 2026 - 12:45 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங்குடன் பேசியுள்ளார்.

அப்போது தாம் வர்த்தக ரீதியாகப் பழகிவந்த சீன மாது, ஓர் உளவாளி என்பதை உணரவில்லை என்று திரு ஜென்சன் கூறியதாக அதிபர் டிரம்ப் திங்கட்கிழமை (நவம்பர் 9) தெரிவித்தார்.

என்விடியா நிறுவனத்தின் தலைமைத்துவம் ஹுவாங்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அந்த சீனப் பெண்ணோடு ஏற்பட்ட உறவை விசாரித்து வருகிறது.

அந்தப் பெண் சீனாவுக்கு ரகசியத் தகவல் வழங்கியிருக்கலாம் என அமெரிக்க உளவுத் துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஹுவாங்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தம்மை ஆச்சரியப்படுத்துவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிகாரிகள் அது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

“நான் அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டேன். ‘அந்தப் பெண் ஓர் உளவாளி என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டதற்கு ‘எனக்கு அவள் உளவாளி என்பது சிறிதளவும் தெரியாது,’ என்று அவர் என்னிடம் கூறினார். அவரை நான் நம்புகிறேன்,” என்றார் அதிபர் டிரம்ப்.

“எஃப்பிஐ அமைப்பு இதனை விசாரிக்கிறது. அவர் நல்ல நிலையில் இருப்பார் என்று எண்ணுகிறேன்,” எனத் திரு டிரம்ப் மேலும் கூறினார்.

2025ஆம் ஆண்டுமுதல் அதிபர் டிரம்ப்புக்கும் திரு ஹுவாங்குக்கும் மிக நெருக்கமான உறவு இருந்துவருகிறது. ‘சிலிக்கான் வேலி’ எனப்படும் அமெரிக்க மென்பொருள் நிலையத்தில் அந்த நட்பு தொடங்கியதாக அறியப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபர் டிரம்ப்பின் அரசாங்கத்துக்கு ஹுவாங் முக்கிய ஆதரவாளராகக் குரல் கொடுத்துவந்துள்ளார். அதோடு சீனாவுக்கு மேம்படுத்தப்பட்ட சில்லுகளை என்விடியா நிறுவனம் விற்பதன் தொடர்பிலும் ஹுவாங் தலைநகர் வாஷிங்டனில் இருந்தபடி பல முயற்சிகளை மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்