விமானக் கண்காட்சிகளைக் குறிவைக்கும் அதிபர் டிரம்ப்

விமானக் கண்காட்சிகளைக் குறிவைக்கும் அதிபர் டிரம்ப்

படம்: ராய்ட்டர்ஸ்

07 Nov 2026 - 2:04 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் விண்வெளி மற்றும் வானூர்தித் தொழில்துறைக்கான புதிய மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாசாவும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அதை உறுதிப்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளில் நடைபெறும் முக்கிய விமானக் கண்காட்சிகளை மிஞ்சும் நோக்கத்தில் அது அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ‘கேப்வீக்’ என அழைக்கப்படும் அந்தப் பிரம்மாண்டமான நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று தமது உரையில் திரு டிரம்ப் கூறினார்.

வெளிநாடுகளில் நடக்கும் விமான மாநாடுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அனைத்துலக விண்வெளி உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறு கடந்த செப்டம்பரில் அமெரிக்க நிறுவனங்களை வெள்ளை மாளிகை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி மற்றும் வானூர்தித் துறைகளில் அமெரிக்காவின் ஆற்றலை முன்னிலைப்படுத்தவும், உலகளாவிய வணிகத்தை ஈர்க்கவுமே இப்புதிய அமெரிக்கக் கண்காட்சி குறிவைக்கிறது.

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொறியாளர்களை ஈர்க்கக்கூடிய பாரிஸ், இங்கிலாந்து, துபாய் விமானக் கண்காட்சிகளின் வரிசையில் இப்போது அமெரிக்காவும் இணைவது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்