வாஷிங்டன்: அமெரிக்காவில் இனி இறக்குமதியாகும் சீனப் பொருள்கள்மீது 104 விழுக்காடு வரையிலான வரிகள் விதிக்கப்படும். சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் வாக்கில் அந்தப் புதிய வரிகள் நடப்புக்கு வந்தன.
50க்கும் அதிகமான நாடுகள்மீதும் 11 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரையிலான திரு டிரம்ப்பின் பதில் வரிகள் அமல்படுத்தப்பட்டன.
அதிபர் டிரம்ப்பின் புதிய வரிகள் பற்றி கலந்துபேசி முடிவெடுக்க பல நாடுகளிலிருந்து அழைப்புகள் குவிந்ததாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்குப் பதில் வரி விதிக்காத நாடுகளுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென் கொரியாவின் இடைக்கால அதிபர் ஹன் டக் சூவுடன் நல்ல கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் திரு டிரம்ப் சொன்னார். திரு ஹன் தென்கொரியாமீதான வரிகளை 25 விழுக்காட்டுக்குக்கீழ் குறைக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“சீனாவும் உடன்பாடு செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் எப்படித் தொடங்குவது என்று அதற்குத் தெரியவில்லை. அவர்கள் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது நிச்சயம் நடக்கும்,” என்று திரு டிரம்ப் ட்ருத் சோஷியல் தளத்தில் (ஏப்ரல் 8) பதிவிட்டார்.
இருப்பினும் சீனா விட்டுக்கொடுப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து அமெரிக்க இறக்குமதிகள்மீது 34 விழுக்காட்டு வரிகளை விதிக்கப்போவதாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து திரு டிரம்ப் சீன இறக்குமதிகள்மீது கூடுதலாக 50 விழுக்காட்டு வரியை விதித்திருப்பதால் ஒட்டுமொத்த வரி விகிதம் 104க்கு அதிகரித்துள்ளது.
திரு டிரம்ப்பின் புதிய வரிகள் ஏற்கெனவே ஒரு நாளில் 2 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
“அமெரிக்கா மீண்டும் பணக்கார நாடாகப் போகிறது,” என்று அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார்.
மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தேவைப்படுவது போல அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் தேவை இல்லை என்று திரு டிரம்ப்பின் பதில் வரிகள் நடப்புக்கு வருவதற்குச் சில மணி நேரம் முன் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப்பின் ஊடகச் செயலாளர் கெரலைன் லிவிட் கூறினார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸண்ட் பதில் வரிகள் விதிக்கப்போவதாகச் சீனா சொன்னது மிகப் பெரிய தவறு என்றார்.
“அமெரிக்கப் பொருள்கள்மீது சீனா வரிகளை உயர்த்துவதால் எங்களுக்கு என்ன நட்டம்? சீனா எங்களுக்கு அனுப்பும் பொருள்களில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் அமெரிக்கா சீனாவுக்கு அனுப்புகிறது,” என்றார் அவர்.
சென்ற ஆண்டு அமெரிக்கா $462.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது. அது $199.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது. அதனால் அமெரிக்காவுக்கு $263 பில்லியன் டாலர் வர்த்தக நட்டம் ஏற்பட்டது.

