டிரம்ப் தலைகீழ் மாற்றம்: கொலம்பிய அதிபரை வரவேற்க ஏற்பாடுகள்

2 mins read
364a3564-a556-43e2-a7b9-c89444a5159a
கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

பொகோட்டா: கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் மிரட்டிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொலம்பிய அதிபரை வரவேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வருகை தர இருக்கும் அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசிவழி உரையாடிய பின்னர் திரு டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.

அதிபர் பதவி ஏற்ற பின்னர் திரு பெட்ரோவுடன் திரு டிரம்ப் முதல்முறை பேசியுள்ளார்.

அந்த முதல் தொலைபேசி உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தாங்கள் பேசியதாக அவ்விரு தலைவர்களும் கூறியுள்ளனர்.

முன்னதாக, கொலம்பிய அரசாங்கத்தின்மீது அமெரிக்க ராணுவம் கவனம் செலுத்தி வருவதாக ஜனவரி 4ஆம் தேதி திரு டிரம்ப் கூறியிருந்தார்.

அண்டைய வெனிசுவேலா நாட்டின் அதிபரை அமெரிக்கப் படை பிடித்த பின்னர் திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.

இந்நிலையில், கொலம்பிய அதிபருடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து திரு டிரம்ப் தமது சமூக ஊடகப் பக்கத்தில் விவரித்தார்.

“கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோவுடன் நான் பேசியது மிகுந்த மரியாதைக்குரியது. அவரது நாட்டின் போதைப்பொருள் நிலவரம் குறித்தும் பிற கருத்துவேறுபாடுகள் பற்றியும் விளக்குவதற்காக அவர் என்னை அழைத்தார்.

“அவரது அழைப்பையும் உரையாடல் தொனியையும் பாராட்டுகிறேன். விரைவில் திரு பெட்ரோவைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்,” என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேபோல, திரு டிரம்ப் அதிபர் ஆன பிறகு முதல்முறையாக அவருடன் தொலைபேசியில் பேசியதாக திரு பெட்ரோவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இரு நாட்டின் அதிபர்களும் தொலைபேசிவழி பேசியது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்