ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சில் முன்னேற்றம்: டிரம்ப்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சில் முன்னேற்றம்: டிரம்ப்

2 mins read
9aee69fa-e568-4f1a-a0ea-c3a4e0607794
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கூறியிருக்கிறார்.

அமெரிக்கா, 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை ஈரானுக்கு அனுப்பியிருப்பதை நம்பத்தகுந்த வட்டாரமொன்று உறுதிப்படுத்தியது.

தாக்குதல்களை நிறுத்துவதன் தொடர்பில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானில் சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசிவருவதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

“நாங்கள் இந்தத் தருணத்தில் அவர்களுடன் பேசி வருகிறோம்,” என்றார் அவர்.

ஆனால் நேரடிப் பேச்சு நடைபெறுவதாகக் கூறப்படுவதை டெஹ்ரான் மறுத்துள்ளது. அது போலியான செய்தி என்று திங்கட்கிழமை ஈரானின் நாடாளுமன்ற நாயகர் முகம்மது பக்கர் கலிபாஃப் தெரிவித்தார்.

15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகமும் இஸ்ரேலின் ஒளிவழி 12ம் குறிப்பிட்டன.

ஹோர்முஸ் நீரிணை, அணுசக்தியற்ற மற்ற வகை எரிசக்தி முதலியவற்றின் தொடர்பில் ஈரான் நல்ல சலுகையை அளித்திருப்பதாகத் திரு டிரம்ப் கூறினார். இருப்பினும் அதுபற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.

தாக்குதலில் ஈடுபடாத மற்றக் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என்று ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திடமும் அனைத்துலக் கடல்துறை அமைப்பிடமும் ஈரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

“இது மிகப் பெரிய பரிசு, இதன் மதிப்பு மிக அதிகம்,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், “ஈரானியத் தரப்பினர் மிகச் சிறந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்,” என்றும் அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்