ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனம் தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் செலவினத்தைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆலோசனைக் குழுமமான அசெஞ்சருடன் அந்நிறுவனம் பல ஆண்டு உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 850 உள்ளூர் வேலைகள் வெளிநிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பணிகள் இந்தியாவிற்கும் சில ஆஸ்திரேலியாவிற்கும் மாற்றப்படவுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முதலீடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிதி, கொள்முதல், மனிதவளம், சந்தைப்படுத்தல் துறைகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் 2027 நடுப்பகுதியில் தொடங்கவுள்ளன.
இதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் நிச்சயமற்ற நிலைக்கு வருந்துவதாக குவாண்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி வனேசா ஹட்சன், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் வேகமும் அளவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பழைய கணினி அமைப்புகளை மாற்றி, புதிய கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த பயன்களை வழங்க முடியும் என்றும் ஹட்சன் கூறினார்.
அசெஞ்சர் ஏற்கும் பணிகள் எதிர்காலத்தில் தானியக்கம் மூலமும் செயற்கை நுண்ணறிவு மூலமும் மேலும் உருமாற்றம் பெறும்.
ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இயன்றவரை மாற்று வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று குவாண்டாஸ் உறுதியளித்துள்ளது. எரிபொருள் செலவு அதிகரிப்பால் விமானக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட சில நாள்களில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
