பட்டர்வொர்த்: இம்மாதத் தொடக்கத்தில் தனது காதலி என்று நம்பப்படும் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி அயினி அடிலா முஹமது ஃபைசால் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றம் புரிந்ததாக எல். ரவீந்தர் தலையசைத்தார்.
இருப்பினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
பிப்ரவரி 4ஆம் தேதி காலை மணி 9.30 முதல் 9.41க்குள் தாமான் ஶ்ரீ முர்னியில் உள்ள வீடொன்றில், 41 வயது பெண்ணைக் கொலை செய்ததாக ரவீந்தர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை, பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கப்படாத நிலையில், இவ்வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்று பெர்னாமா செய்தி கூறியது.

