தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய உச்சம்: வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த 117 மில்லியன் பேர்

2 mins read
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தகவல்
0d7c58c2-5927-4706-8320-62ed314b2a97
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: என்றும் இல்லாத அளவில் 2023ஆம் ஆண்டிறுதி நிலவரப்படி 117.3 மில்லியன் பேர் தங்களின் வசிப்பிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஜூன் 13ஆம் தேதி தெரிவித்துள்ளது.

பெருமளவிலான அனைத்துலக அரசியல் மாற்றங்கள் இல்லாவிடில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இவர்கள் அகதிகள், தஞ்சம் தேடுவோர், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள், சச்சரவாலும் துன்புறுத்தலாலும், இன்னும் வேறு அதிகரிக்கும் சிக்கலுடைய வன்முறை வகைகளால் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள்,” என்றார் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையர் திரு ஃபிலிப்போ கிராண்டி.

“இடம்பெயர்வதற்குத் தொடர்ந்து முக்கியக் காரணியாக உள்ளது, சச்சரவே,” என்றார் அவர்.

கடந்த 12 ஆண்டுகளில் தங்களின் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவதாக அனைத்துலக அளவில் காணப்பட்ட போக்கு குறித்து ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.

அத்துடன் 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாகவும் ஏப்ரல் இறுதியில் 120 மில்லியனைத் தாண்டி இருக்கலாம் என்றும் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

மக்களை இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளிய சூழல்களில் ஆக மோசமானது சூடான் போர் என்று சுட்டினார் திரு கிராண்டி.

இதில் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர் உள்நாட்டளவில் இடம்பெயர்ந்தனர் என்றும் மேலும் இரண்டு மில்லியன் பேர் அண்டைநாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து சேர்கிறார்கள்,” என்று சாட் நாட்டில் தஞ்சம் புகுவோரைக் குறித்துச் சொன்னார் அவர்.

காஸாவில் நிலவிவரும் நெருக்கடியால் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களில் பலர் பலமுறை இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்