புதுடெல்லி: தேசியக் கொடியை அவமதித்து போராட்டங்களில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் புதன்கிழமை (அக்டோபர் 21) நீதிமன்றத் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் கூடுதல் விசாரணைக்காக ராஜௌரி கார்டன் அலுவலகத்துக்கு வரும்படி புதுடெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது. தங்களுக்கு கால அவகாசம் தேவை என்பதை காரணமாகத் தெரிவித்து அதனை இருவரும் மறுத்துவிட்டனர்.
புதுடெல்லி காவல்துறை அவ்விருவரிடமும் விசாரணைக்கான அழைப்பாணையை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் விவரங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்டது.
சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எஸ்இஎம்) அவர்களை சொந்தப் பிணையில் விடுவித்தது. சட்டத்துக்கு உட்பட்டு, அமைதியைக் கட்டிக்காப்பதற்கு அவர்கள் இருவரும் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுதலை ஆனார்கள்.
இதற்கிடையே தமிழ்நாட்டின் ‘வீ த லீடர்ஸ்’ சமூக அமைப்பின் நிறுவனரும் முன்னாள் தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஆகிய அண்ணாமலை புதுடெல்லி போராட்டத்தை பிஜேபி அரசாங்கம் கையாண்ட விதத்தைச் சாடியுள்ளார்.
ஜந்தர் மந்தர் வளாகத்தைப் போராட்டக் களமாகப் பயன்படுத்தத் தடை ஏற்படுத்தியது, போராட்டத்தில் ‘பெலட்’ தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது போன்ற காவல்துறை செயல்பாடுகளை தமது எக்ஸ் சமூக ஊடகத் தளப் பதிவில் அண்ணாமலை குறைகூறினார். மேலும் எஸ்இஎம் என்ற சிறப்பு நீதிமன்றத்தில் நீதி வழங்கும் பொறுப்பைக் காவல்துறை அதிகாரிகளே ஏற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக தனது ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை வெளிநாடுகளின் ஆதரவோடு நடப்பவை அல்லது தேசத்துக்கு எதிரானவை என்று வகைப்படுத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.
