பெய்ஜிங்: வன்முறை, போர் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பை இவ்வட்டாரம் என்றும் மறக்கக்கூடாது; அதேவேளை அமைதி, செழிப்பு இரண்டையும் அலட்சியமாகப் பார்க்கக்கூடாது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் புதன்கிழமை (செப்டம்பர் 3) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ராணுவ அணிவகுப்பில பங்கேற்ற பிறகு திரு கான் அவ்வாறு பதிவிட்டார்.
“கடந்த காலத்தை நினைவில் நினைவில் கொண்டு உயிரிழந்த மில்லியன் கணக்கானோரைக் கெளரவிப்பது முக்கியம். அதேநேரம், நடந்ததை நினைத்து அதில் சிக்கிக்கொள்ளாமல் வருங்காலத்தை நோக்கிச் செல்லவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒன்றாகச் செழிப்படைந்து முன்னேற்றம் காண வட்டார அளவில் அமைதியையும் நிலைத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு சிங்கப்பூர் அதன் எல்லா பங்காளிகளுடனும் இணைந்து செயல்படும் எண்ணத்தில் இருந்துவருகிறது,” என்றும் திரு கான் விவரித்தார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து இவ்வட்டாரம் வெகு தூரம் வந்திருப்பதாகவும் அவர் சுட்டினார்.
முன்னதாக, புதன்கிழமை திரு கான் டியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பில் பங்கேற்றார். சீன அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் அதில் கலந்துகொண்டார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் 80ஆம் ஆண்டு நிறைவை அந்த அணிவகுப்பு அனுசரித்தது.

