பெய்ஜிங்: சீனாவில் வீசிய புயலில் குறைந்தது 21 பேர் மாண்டனர். பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. நீர்த்தேக்க அணை ஒன்றும் உடைந்தது.
இந்நிலையில், சீனாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உயிருடன் இருப்பவர்களை மீட்புப் படையினர் தேடிவருகின்றனர். பெருமழை புதன்கிழமையும் (ஜூலை 8) தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேசாக் புயலால் ஏற்பட்ட கனமழையாலும் வெள்ளத்தாலும் குவாங்சியின் தென்பகுதியில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் ஏறக்குறைய 130,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர். பக்கத்து மாநிலமான குவாங்டோங்கிலும் மழை தொடரும் என்று கூறப்பட்டது.
குவாங்சியில் 40 ஆறுகளும் நீர்வழிகளும் கரைபுரண்டு ஓடின. கிட்டத்தட்ட 13,000 ஏக்கர் வேளாண் நிலப்பகுதி சேதமடைந்ததாக அரசாங்க ஊடகங்கள் கூறின.
உணவு, மழையங்கிகள், ரப்பர் படகுகள் போன்ற கூடுதல் பேரிடர் நிவாரணப் பொருள்களைச் சீன அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளனர். சீன அரசாங்கத்தின் சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை அதனைத் தெரிவித்தது.
இதற்கிடையே, சீனாவின் வடமேற்கில் உள்ள கான்சு மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 21க்கு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அங்கு 33 பேர் புதைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலச்சரிவு உண்டான பகுதிக்கு மீட்புக் குழுக்கள் சென்றுள்ளன. ஜூலை 7ஆம் தேதி காலை மணி 6.56க்கு டாங்சாங் வட்டாரத்தின் ரென்சாங் கிராமத்தில் நிலச்சரிவு உண்டானது.
“டாங்சாங் வட்டாரத்தில் நிலச்சரிவு நேர்ந்த பகுதியில் தேடுதல், மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. அங்கு 21 பேர் உயிரிழந்தனர்,” என்று சின்ஹுவா தெரிவித்தது. உள்ளூர் அதிகாரிகளை அது மேற்கோள்காட்டியது.
நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் புலனாய்வு செய்யப்படுவதாக உள்ளூர் ஊடகம் கூறியது.
மறுநிர்மாணப் பணிகளுக்காக அதிகாரிகள் கிட்டத்தட்ட $5.71 மில்லியனை ஒதுக்கியுள்ளனர்.
கான்சு வட்டாரத்தில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது புதிதல்ல.

