பெய்ஜிங்கில் இயந்திர மனிதர்கள் உணவு சமைத்துப் பரிமாறும் உணவகம் அறிமுகம்

பெய்ஜிங்கில் இயந்திர மனிதர்கள் உணவு சமைத்துப் பரிமாறும் உணவகம் அறிமுகம்

படம்: சைனா டெய்லி

18 Aug 2026 - 5:26 pm

1 mins read

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் ஃபெங்டாய் மாவட்டத்தில், நூடுல்ஸ் உணவு வகைகளைச் சமைத்து, வாடிக்கையாளர்களின் மேசைக்கே கொண்டுவந்து சேர்க்கும் முழுமையான இயந்திர மனிதர் உணவகம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மேசையிலுள்ள ‘கியூஆர்’ குறியீட்டை வருடி உணவை ‘ஆர்டர்’ செய்யலாம். மாவை அரைத்துத் தயாரிப்பது முதல், நூடுல்சை அவித்து, தேவையான ‘சாஸ்’ மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்த்து, இயந்திரக் கரங்கள் மூலம் தட்டில் வைத்து, சக்கர வாகன இயந்திரம் வழியாக மேசைக்கு அனுப்புவது வரை அனைத்தும் தானியக்க முறையில் நடைபெறுகின்றன.

முழு உணவும் தயாராக ஏறத்தாழ மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகின்றன. இருப்பினும், மூலப்பொருள்களை நிரப்புதல், உபகரணங்களைக் கண்காணித்தல் மற்றும் மேசைகளைச் சுத்தம் செய்தல் போன்ற சில அடிப்படைப் பணிகளுக்கு மனித ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

பெய்ஜிங் யூலி டெக்னாலஜி நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தானியங்கி அமைப்பின் மூலம் உணவின் சுவை மாறாமல் இருப்பதோடு, அதிகச் சுகாதாரமும் உறுதி செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாகப் பூங்காக்கள், மருத்துவமனைகள் எனப் பல்வேறு துறைகளிலும் இயந்திர மனிதர்களின் பயன்பாட்டைச் சீனா தீவிரமாக அதிகரித்து வரும் வேளையில், இந்த உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்