வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான சட்டம் கடுமையானாலும் அமலாக்கம் அவசியம்

2 mins read
53af18aa-1335-46d1-91f2-12ccc39576f8
இந்தோனீசியாவில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளில் மனிதக் குரங்குகளும் அடங்கும். - படம்: தி நேச்சர் கன்சர்வன்சி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பல்லாண்டு காலமாக, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்பட்டும் நாட்டிலிருந்து கடத்தப்பட்டும் வந்துள்ளன.

சட்டத் திருத்தம், பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதோடு, இந்தோனீசியாவிலும் அதன் எல்லைகளிலும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று வனவிலங்கு ஆர்வலர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஆனால், அமலாக்கம் முக்கியம் என்பதைச் சுட்டிய அவர்கள், சட்டவிரோத வனவிலங்குக் கடத்தலை வேரோடு அழிப்பதில் முழுமையான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் இந்தோனீசியாவில் தலைவிரித்தாடுகிறது. இது, அதன் பல்லுயிர்ச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் சமநிலையை நிலைகுலையச் செய்கிறது.

‘உயிரியல் இயற்கை வளங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு’ குறித்த சட்டத் திருத்தம், ஆகஸ்ட் மாதம் நடப்புக்கு வந்தது.

கடும் தண்டனைகள் மற்றும் வனவிலங்குக் கடத்தல்காரர்கள் குற்றம் சாட்டப்படுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதன் மூலம் வனவிலங்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பை அச்சட்டத் திருத்தம் உறுதிசெய்யும்.

இப்போது, தனிநபர்களுக்கு முன்பு அதிகபட்சமாக இருந்த 100 மில்லியன் ரூப்பியாவிலிருந்து 5 பில்லியன் ரூப்பியா (S$420,000) வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கு முந்திய சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட சிறைத்தண்டனையைவிட இது மும்மடங்காகும்.

மேலும், பெருநிறுவனங்கள் அல்லது பெருநிறுவனக் கடத்தல்காரர்கள் மீது திருத்தச் சட்டத்தின்கீழ் இப்போது குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 பில்லியன் ரூப்பியா வரை அபராதமும் 20 ஆண்டுகள் வரை சிறையிலும் அடைக்கப்படலாம்.

சுற்றுப்புற, வனத்துறை அமைச்சின் சட்ட அமலாக்க தலைமை இயக்குநர் ரசியோ ரிதோ சானி, இந்த நடவடிக்கை சட்டவிரோத வனவிலங்கு கடத்தலைக் குறைக்கவும் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தவும் உதவும் என நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்