மஞ்சள் ஆறாக, மடைதிறந்த வெள்ளமாக மலேசிய பக்தர்கள்

மஞ்சள் ஆறாக, மடைதிறந்த வெள்ளமாக மலேசிய பக்தர்கள்

2 mins read
03b9e376-8988-45d8-bc3e-ae454704ba01
272 படிகளைக் கொண்ட பத்துமலை முருகன் கோவிலில் காவடிகள் புடைசூழ காணும் திசையெங்கும் பக்தர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 5

கோலாலம்பூர்: தைப்பூசத் திருநாள் மலேசியாவின் முருகன் திருத்தலங்களில் விண்ணதிரும் பக்தி முழக்கங்களுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் தொடங்கி பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை ஆகிய திருத்தலங்களுடன் சுங்கை பட்டாணி, நெகிரி செம்பிலான், ஜோகூர் போன்ற பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பல்லாயிரம் பேர் வழிபட்டனர்.

பால்குடம் ஏந்தியும் விதவிதமான காவடிகளை சுமந்தும் அலகு குத்தியும் பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரையாகச் சென்றனர்.

அவர்களுக்கு பக்கதுணையாக உறவினர்களும் நண்பர்களும் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

காணுமிடமெல்லாம் மஞ்சள் ஆறு பாய்ந்ததுபோல மஞ்சள் நிற உடையணிந்த பக்தர்கள் பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தச் சென்றதைக் காணமுடிந்தது.

மலேசியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சமய விழாக்களில் தைப்பூசம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதத்தை வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர்.

ஒரு துடிப்புமிக்க பக்தி விழாவை முதல்முறை கண்டதாக எல்ஃபீ, 33, என்னும் துருக்கிய நாட்டு சுற்றுப் பயணி மலாய் மெயில் ஊடகத்திடம் கூறினார். பத்துமலை முருகன் கோவில் தைப்பூச கொண்டாட்டத்தை அவர் கண்டு வியந்தார்.

“வலுவான பக்தி உணர்வும் உற்சாகம் குறையாத வழிபாடும் என்னைக் கவர்ந்தன,” என்றார் அவர்.

மலேசியக் குடிமகனான நூர்தின் சாப்லி, 51, என்பவர் தமது ஜப்பானிய மனைவி நபுக்கோ தக்காஹாஷி, 49, என்பவரை தைப்பூசம் காண பத்துமலைக்கு அழைத்து வந்திருந்தார்.

“பல கலாசார மலேசிய சமூகத்தில் இதுபோன்ற விழாக்களை நேரில் காண்பது பிற இன மக்களின் நம்பிக்கையையும் கலாசாரத்தையும் நன்கு புரிந்துகொள்ள எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு வாய்ப்பு,” என்றார் அவர்.

இதேபோன்ற குறையாத உற்சாகம் சிலாங்கூர் மாநிலத்தின் கோலா சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலிலும் காணப்பட்டது.

பொழுது விடியுமுன்னரே 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்தக் கோவிலை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

தைப்பூசம் நிறைவடைவதற்குள் 30,000 பேர் வருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக சிலாங்கூர் சிறுபான்மை விவகாரக் குழுத் தலைவர் வி. பாப்பராயுடு கூறினார்.

பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் கெபுன் பங்காவில் உள்ள முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த அதிகாலை 4 மணிக்கே பல்லாயிரம் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

அங்குள்ள தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழா களைகட்டி இருந்தது.

அந்த விழாவை நேரில் கண்ட பிரான்ஸ் நாட்டின் பியரே லாரன்ட், 45, “இது எனக்கு தனித்துவ கலாசார அனுபவத்தைக் கொடுத்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்