ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்திய சிங்கப்பூர்க் கார்

ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்திய சிங்கப்பூர்க் கார்

2 mins read
38ae06fa-b220-43e3-9307-0ad4625d2442
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் மலேசிய பெட்ரோல் நிலையங்களில் ரோன்95 ரக பெட்ரோலைப் பயன்படுத்த முடியாது. - படம்: சாவ்பாவ்

கோலாலம்பூர்: மலேசிய அதிகாரிகள், கோலாலம்பூருக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்குக் கழிவு விலையில் விற்கப்படும் ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்தியதற்காகச் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கார் ஓட்டுநர் பிடிபட்டார்.

மலேசியப் பெட்ரோல் நிலையங்களில் வெளிநாட்டுக் கடன் அட்டைகளுக்கும் பண அட்டைகளுக்கும் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டன. அப்படியிருந்தும், வெள்ளை சொகுசு காரை ஓட்டிய ஆடவர், பெட்ரோல் நிலையத்தில் வெளிநாட்டுக் கடன் அட்டையைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

‌ஷெல் பெட்ரோல் நிலையத்தில் சிங்கப்பூர்க் காருக்கு ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்துவது குறித்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது கிளைக்குப் புகார் வந்ததாகச் சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) தெரிவித்தது.

சிங்கப்பூரின் ‘எஸ்ஜி ரோட் விஜிலான்டே’ (SG Road Vigilante) ஃபேஸ்புக் பக்கத்தில், ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்தும் ஆடவரின் புகைப்படங்களும் ஏப்ரல் 25ஆம் தேதி வலம்வந்தன. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சீ பார்க் (Sea Park) அக்கம்பக்க வட்டாரத்தின் ‌ஷெல் நிலையத்தில் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அந்தப் பக்கம் குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பில் பெட்ரோல் நிலையத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்தது.

கூடுதல் நடவடிக்கைக்காகவும் விசாரணைக்காகவும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் பெட்ரோல் நிலையத்திலிருந்து பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியாவில் வெளிநாட்டுக் கார்களுக்கான பெட்ரோல் விதிமுறைகள்

மலேசியாவின் ரோன்95 ரக பெட்ரோலை வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட கார்கள் வாங்க தடை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட காரை ஓட்டும் மலேசியர்களுக்கும் அந்தத் தடை பொருந்தும்.

மலேசியச் சட்டத்தின்கீழ், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே ரோன்95 பெட்ரோலை வாங்க முடியும்.

குறிப்புச் சொற்கள்