கியேவ்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடந்துவரும் போரில் இருநாடுகளும் ஒத்துழைக்கும் ஒருசில அம்சங்களில், போரில் வீழ்ந்து உயிரிழந்த வீரர்களின் சடலங்களை இருதரப்பிலும் ஒப்படைத்துக் கொள்வதும் ஒன்றாகும்.
அதன்படி, 252 உக்ரேனிய வீரர்களின் சடலங்களை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 22) உறுதிப்படுத்தினர்.
உக்ரேனிடம் இருந்து ரஷ்யா அதன் 25 வீரர்களின் சடலங்களைப் பெற்றுக்கொண்டதாக ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் ஷம்சேல் சாராலியவ் ஆர்பிசி ஊடகத்திடம் தெரிவித்தார்.
போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்வதும், போர்க் கைதிகளை ஒரு தரப்பு மற்றொரு தரப்பிடம் ஒப்படைப்பதும் அவ்வப்போது நடந்துவருகிறது.
“தாயகம் திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளின் பயனால் 252 வீரர்களின் சடலங்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளன,” என உக்ரேனில் இயங்கும் போர்க்கைதிகள் நடத்தப்படும் விதத்துக்கான அமைப்பின் தலைமையகம் தெரிவித்தது.
காவல்துறையுடன் அரசாங்க அதிகாரிகளும் உடல்களை அடையாளம் காண்பது போன்ற இதர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் எனவும் அது கூறியது.
இந்த நடவடிக்கைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் (ஐசிஆர்சி) வழங்கிய உதவிக்காக உக்ரேன் அமைப்பு அதன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டது. அதோடு சடலங்களை ஏந்தி வந்த பல வாகனங்களுக்கு அருகில் ஐசிஆர்சி அதிகாரிகள் நின்றிருந்த புகைப்படங்களையும் அது சமூக ஊடகங்களில் பதிவிட்டது.
