மியூனிக்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கிழக்கு ஐரோப்பாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) பயணத்தைத் தொடங்கிய அவர், ஸ்லோவேக்கியாவுக்கும் ஹங்கேரிக்கும் செல்லவிருக்கிறார். அந்த நாடுகளின் பழைமைவாதத் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர். அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் அவ்வப்போது உரசுவதுண்டு.
எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பது பற்றியும் நேட்டோ கடப்பாடுகள் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் அந்நாடுகளின் தலைவர்களுடன் திரு ரூபியோ விவாதிப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
“இரு நாடுகளும் எங்களுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளன. மிகவும் நெருக்கமாகச் செயலாற்றி அவை அமெரிக்காவுடன் ஒத்துழைக்கின்றன. இரு நாடுகளுக்கும் இதற்கு முன்னர் நான் சென்றதில்லை. இப்போது அந்நாடுகளின் தலைவர்களைப் பார்த்துப் பேசுவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று திரு ரூபியோ ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான திரு ரூபியோ, பிராட்டிஸ்லாவா நகரில் ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபீக்கோவைச் சந்திக்கிறார். கடந்த சில நாள்களாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், திரு ரூபியோ அங்குச் சென்றுள்ளார். ஸ்லோவாக்கியப் பிரதமர் கடந்த மாதம் ஃபுளோரிடா போயிருந்தார்.
திரு ரூபியோ, திங்கட்கிழமை ஹங்கேரித் தலைவர் விக்டர் ஓர்பனைச் சந்திக்கிறார். அங்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய கருத்துக் கணிப்புகளில் திரு ஓர்பன் பின்தங்கியிருக்கிறார்.
ஜனநாயக விதிமுறைகளை மாற்றிப் பழைமைவாதப் போக்கிற்கு மாறுவதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளுடன் திரு ஃபீக்கோவும் திரு ஓர்பனும் மோதினர்.
ஆயினும் மாஸ்கோவுடன் அவர்கள் நல்லுறவைக் கட்டிக்காக்கின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளை அவர்கள் குறைகூறினர் அல்லது அவற்றைத் தாமதமடையச் செய்தனர். உக்ரேனுக்கு ராணுவ உதவிகளை அனுப்புவதற்கும் தலைவர்கள் இருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது மாஸ்கோ படையெடுத்த பிறகும் அதனிடமிருந்து எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை ஸ்லோவாக்கியாவும் ஹங்கேரியும் தொடர்ந்து வாங்கிவருகின்றன. அமெரிக்கா அதனைக் குறைகூறியது.
அதுபற்றி இரு நாடுகளின் தலைவர்களுடனும் விவாதிக்கப்போவதாகத் திரு ரூபியோ சொன்னார். ஆனால் அதுகுறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

