அதிபர் புட்டினைச் சாடியதாக ரஷ்ய வலைப்பதிவாளர் கைது

அதிபர் புட்டினைச் சாடியதாக ரஷ்ய வலைப்பதிவாளர் கைது

1 mins read
1b2dac61-0d9a-40b2-8ac9-f6960bba1893
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள புனித ஆண்ட்ரூ மடாலயம். - படம்: இபிஏ

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புட்டினையும் அவர் உக்ரேனுடன் நடத்திவரும் போரையும் குறைகூறிய சந்தேகத்தின்பேரில் அந்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வலைப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது என்று ‘டாஸ்’ (டிஏஎஸ்எஸ்) எனும் ரஷ்ய அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) செய்தி வெளியிட்டது.

இல்யா ரிமெஸ்லோ என்ற அந்த 42 வயது வழக்கறிஞர் முன்பு ரஷ்ய அரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்தவர்.

ஆயினும், இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி சமூக ஊடகத்தில் அவர் அதிபர் புட்டினை எதிர்த்து பதிவிட்டார். அதிபரை ஏன் தாம் ஆதரிக்கவில்லை என்பது குறித்து ஐந்து காரணங்களை அறிக்கையாக முன்வைத்தார். அது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த அறிக்கையில் அவர், ரஷ்யாவில் பேச்சுரிமைக்கு எதிரான சட்டங்களையும் உக்ரேன் போரையும் கண்டித்ததுடன், அதிபர் புட்டின் பதவி விலகி விசாரணையை எதிர்நோக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அறிக்கை வெளியிடப்பட்ட சில நாள்களில் அவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவராக அங்குச் சென்றாரா அல்லது வலுக்கட்டாயமாக அவர் அனுப்பிவைக்கப்பட்டாரா என்பதை அறிய முடியவில்லை. அங்கிருந்து ஒருமாதத்துக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

திரு ரிமெஸ்லோவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று டாஸ் ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்