கோலாலம்பூர்: ரமலான் மாதத்தை முஸ்லிம்கள் கொண்டாடிவரும் நேரத்தில், வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் சாபா மக்களின் நலனுக்காக வேண்டிக்கொள்ளுமாறு மலேசிய மக்களை அந்நாட்டுத் துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமையன்று (பிப்ரவரி 21) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், வெள்ளத்தால் சாபா மக்களின் வீடுகள், அன்றாட வாழ்க்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், மீட்பு, நிவாரணப் பணிகள், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கை போன்றவை துரிதமாகவும் திறம்படவும் நடைபெறுவதை உறுதிசெய்ய அனைத்து மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதாக அப்பதிவில் அவர் தெரிவித்தார்.
“மக்களின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டோரின் நலன், பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை ஏற்று நடக்குமாறும் நான் நினைவூட்டுகிறேன்,” என்றார் திரு ஹமிடி.
இதற்கிடையே, சாபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி மாலை நிலவரப்படி, 124 குடும்பங்களைச் சேர்ந்த 406 பேராக இருந்தது. அந்த எண்ணிக்கை பிப்ரவரி 21ஆம் தேதி காலை 8 மணியளவில் 3,685ஆக அதிகரித்துள்ளது.
சாபா மாநிலப் பேரிடர் நிர்வாகச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களான கோத்தா மருடு, பெடாஸ், பைத்தான் ஆகிய இடங்களில் 18 தற்காலிக நிவாரண நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மொத்தம் 47 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
பெடாஸ் மாவட்டத்தில் 30 இடங்களும் கோத்தா மருடில் 12 இடங்களும் பைத்தானில் ஐந்து பகுதிகளும் அவற்றில் அடங்கும்.

