ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை, 135 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை, 135 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

2 mins read
வறண்ட நதிகள், கொழுந்துவிட்டு எரியும் காடுகள், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
a805d416-353d-496f-9797-2ccd7c80b674
பிரான்ஸின் தென்மேற்கு வட்டாரத்தில் 1,100 ஹெக்டர் பரப்பளவில் பரவிய காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14), தீயணைப்பு வீரர்கள் 500 பேர் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பில் 6 விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பாரிஸ்: ஐரோப்பியக் கண்டம் முழுவதிலும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாழும் மில்லியன்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 135 மில்லியனுக்கும் அதிகமானோர் 35 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பநிலையை எதிர்கொள்வதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

ஜெர்மனியின் ரைன் நதியில் கடும் வெப்ப அலை காரணமாக நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் ஏற்பட்டு, சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க நதிகளை இயற்கை முறைக்கு மாற்றுவதா, சீரமைப்பதா என்பதில் ஜெர்மனி அமைச்சர்களிடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது.
ஜெர்மனியின் ரைன் நதியில் கடும் வெப்ப அலை காரணமாக நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் ஏற்பட்டு, சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க நதிகளை இயற்கை முறைக்கு மாற்றுவதா, சீரமைப்பதா என்பதில் ஜெர்மனி அமைச்சர்களிடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பிரான்ஸின் மத்தியப் பகுதியில் உள்ள ‘ஷாத்தோமேலான்’ எனும் இடத்தில் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸைத் தொட்டது. பாரிஸ் நகரிலும் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

லண்டனில் உள்ள ‘கியூ கார்டன்ஸ்’ பகுதியில் வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பிரிட்டன் வரலாற்றில் ஐந்தாவது மிக வெப்பமான நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸைக் கடந்துள்ளது.

பிரிட்டன் இதுவரை இல்லாத அளவிலான மிக வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் ஏறக்குறைய 29 மில்லியன் பேரும், ஸ்பெயினில் 25 மில்லியன் பேரும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள ‘ரீஜன்ட்ஸ் பூங்கா’ வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை, ‘பிளானட் லேப்ஸ் பிபிசி’ நிறுவனம் ஆகஸ்ட் 11ஆம் தேதி எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.
பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள ‘ரீஜன்ட்ஸ் பூங்கா’ வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை, ‘பிளானட் லேப்ஸ் பிபிசி’ நிறுவனம் ஆகஸ்ட் 11ஆம் தேதி எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பல பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், குரோஷியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் கடுமையான காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் பெல்ஜிய எல்லை அருகே காட்டுத் தீ கிராமத்தை நோக்கிப் பரவியதைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோர் அதிகாலை வேளையில் வெளியேற்றப்பட்டனர்.

பிரான்சின் தென்மேற்கு வட்டாரத்தில் 1,100 ஹெக்டர் பரப்பளவில் பரவிய காட்டுத் தீ காரணமாக கிராமவாசிகள் 525 பேர் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் 500 பேர், ஆறு விமானங்களை ஈடுபடுத்தித் தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குரோஷியாவின் ‘ஓமிஸ்’ சுற்றுலா நகரத்தில் பலத்த காற்றினால் பரவிய காட்டுத் தீ வீடுகளைச் சூழ்ந்ததில், கிட்டத்தட்ட 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 36 பேரில் எழுவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதரால் ஏற்படும் பருவநிலை மாற்றம்

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே கடும் வெப்ப அலைகளுக்குக் காரணம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அடர்த்தியான நகரப் பகுதிகளில் உண்மையான பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று ‘கிளைமேட்டேஷ்போர்டு’ அமைப்பின் டேவிட் ஜாப்லோன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்