தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டிராமி’ புயல், வெள்ளத்தில் 87 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணியில் சிக்கல்

2 mins read
eb7131a1-5705-45fe-b6f2-267d32a63658
கெமரைன்ஸ் சர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: பிலிப்பீன்ஸில் டிராமி புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு பிலிப்பீன்ஸில் மீட்புப் படையினர் சென்றடைய இயலாத அளவுக்கு ஏராளமானோர் சிக்கித் தவிக்கின்றர்.

புயல் தாக்கத் தொடங்கியதில் இருந்து அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை குறைந்தபட்சம் 87 பேரின் உயிரை டிராமி புயல் பறித்துவிட்டது.

பைக்கோல் வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குடியிருப்பாளர்கள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் உயர்மாடியிலும் கூரையிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உதவிக்காகக் காத்திருக்கும் அவர்களை மீட்புப் படையினர் அவ்வளவு எளிதில் அணுக இயலவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

நிலைமையை ஏஎஃப்பி செய்தியாளரிடம் விளக்கிய அந்த வட்டார காவல்துறை இயக்குநர் ஆண்ட்ரே டைஸன், “வெள்ளம் இன்னும் தணிந்தபாடில்லை. உதவி கேட்டு வரும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன,” என்றார்.

“எளிதில் அணுக முடியாதவர்களை இயன்றவரை விரைவில் மீட்க வேண்டி உள்ளது. காரணம், வயிற்றுப்பசி அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாகத் தோன்றும்.

“வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

“கெமரைன்ஸ் சர் என்னும் மாநிலத்தில் உணவுக்கும் தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கிவிட்டன. எனவே, கூரைகளில் தங்கி உதவிக்கு ஏங்கும் மக்களை அணுகுவது கடினமாக உள்ளது,” என்றும் திரு டைஸன் கூறினார்.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் சனிக்கிழமை (அக்டோபர் 26) வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சேதமுற்று பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

டிராமி புயலால் நிகழும் உயிர்ப்பலி அதிகரித்த வண்ணம் உள்ளது.

பைக்கோல் வட்டாரத்திலும் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள பதங்காஸ் மாநிலத்திலும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்